Published : 28 Sep 2019 03:43 PM
Last Updated : 28 Sep 2019 03:43 PM

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் பிரதமர் மோடியுடன் பேச்சுக்கு இடமே இல்லை: பாக்.பிரதமர் இம்ரான் கான் ஆவேசம் 

வாஷிங்டன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால், பிரதமர் மோடியுடன் சந்திப்புக்கும், பேச்சுக்கும் இடமே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் கடந்த 24-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நேற்றுப் பேசினர். இதில் இம்ரான் கான் தான் பேசிய 50 நிமிடங்களில் பெரும்பகுதியை காஷ்மீர் குறித்துதான் பேசினார். மேலும், இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே சிஎன்என் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் பேட்டி அளித்தார் அதில் அவரிடம், பிரதமர் மோடியுடன் இனிமேல் பேச்சு நடத்துவீர்களா என்று நிருபர் கேட்டதற்கு, " ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பிரதமர் மோடி அரசு, இனிமேல் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை" எனத் தெரிவித்தார்.

ஆனால்,எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் பேச்சு நடத்துவோம் என்று இந்தியா தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் எழுப்பியபோதிலும் கண்டுகொள்ளவில்லையே என்று நிருபர் கேட்டதற்கு, இம்ரான் கான் பதில் அளிக்கையில், " உலகத் தலைவர்கள் இந்தியாவை 120 கோடி மக்கள் வாழும் பெரிய சந்தையாகப் பார்க்கிறார்கள். உலகத் தலைவர்கள் காஷ்மீர் விவகாரத்தின் தன்மையை உணரவில்லை. அவர்களுக்கு இந்தியச் சந்தையும், வர்த்தகமும் மட்டும்தான் தெரிகிறது. இது வேதனைக்குரிய விஷயம், மனித உயிர்களை விட பொருட்களுக்குத்தான் மதிப்பு

அதேசமயம், நியூயார்கி்ல் பல நாடுகளின் தலைவர்கள் காஷ்மீர் சூழல் குறித்து என்னிடம் பேசினார்கள். ஆனால், பிரதமர் மோடியோ, காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை என்று தெரிவிக்கிறார்.

இருதரப்பு உறவுகள் குறித்து தொடர்ந்து மோடி பேசுகிறார், நாங்கள் பேச முயற்சிக்கும்போது, இது ஒருதலைப்பட்சமான விஷயம், இதைச் சுற்றி அனுக வேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் இதை கவனித்து தலையிடுவார்கள் என நம்புகிறேன்.

இந்தியா கூறும் குற்றச்சாட்டுபோல் நாங்கள் சர்வதேச எல்லை ஓரத்தில் தீவிரவாதிகள் யாரையும் அனுப்பவில்லை. உண்மையில் பாகிஸ்தான் மக்கள் யாரேனும் காஷ்மீருக்குள் சென்றால் அவர்கள் எங்களை எதிரியாகப் பார்ப்பார்கள்.

முதல்முறையாக இரு அணுஆயுத நாடு நேருக்கு நேர் சந்திக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்தததுபோல் செல்கிறது, இந்த விஷயத்தின் பதற்றத்தை தணித்து உடனடியாக அமைதியாக வேண்டும், இந்த விவகாரம் பெரிதாக நாங்கள் விரும்பவில்லை.

6 ஆண்டுகளில் இந்தியாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது, என்னுடைய அச்சமும் வேகமாக மாறி அதிகமாகியுள்ளது. அதனால்தான் நான் திருப்திபடுத்தும் பணியில் இறங்குகிறேன். காஷ்மீர் விவகாரத்தில் உலகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x