Last Updated : 05 Jul, 2015 12:10 PM

 

Published : 05 Jul 2015 12:10 PM
Last Updated : 05 Jul 2015 12:10 PM

மக்களை மதிக்காத மியான்மர் - 9

இருபது வருடங்களுக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் மியான்மரில் 2010-ல் நடை பெற்றது. ராணுவ ஆட்சியிலிருந்து மக்கள் ஆட்சிக்கு அந்த தேசம் மாறுவதற்கான ஒரு குறியீடு இது என்று கருதப்பட்டது. ஆனால் எதிர்க் கட்சிகள் இந்த தேர்தல் ஒரு கண்துடைப்பு என்றன. முழுவதும் அநீதிகள் நிறைந்த தாகத்தான் அந்த தேர்தல் இருக்கும் என்றுதான் அவை கணித்தன.

ஆங் சான் சூச்சி தலைமை வகித்த ஜனநாயக தேசிய கூட்ட மைப்பு தேர்தலைப் புறக்கணித்தது. (அந்த புறக்கணிப்பில் புதைந் திருந்த ரவுத்திரம் புரிந்து கொள் ளத்தக்கதுதான். அதற்குமுன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி மாபெறும் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி செய்ய அனுமதிக்கப் படவில்லை).

மார்ச் 2011-ல் ராணுவ ஆட்சியே ஒரு அரசை அமைத்தது. தெயின் ஸெயின் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்கு முன் ராணுவ தளபதியாக இருந்தவர். ஆனால் தாங்களே அறிமுகப்படுத்திய இந்த சிறிய மாறுதலைக்கூட ராணுவ ஆட்சிக்கு தொடரப் பிடிக்கவில்லை. 2008-ல் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதன்படி பாராளுமன்றத்தில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களாவது ராணுவத்தை சேர்ந்தவர்களாக இருந்தாக வேண்டும். தவிர மூன்று அமைச்சர்கள் பதவி ராணுவ அதிகாரிகளுக்குத்தான் அளிக் கப்படும். ஏதோ அமைச்சர்கள் அல்ல, மிக முக்கியமான மூன்று துறைகளுக்கான அமைச்சர்கள் - உள் துறை, பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதி விவகாரங்கள்.

ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் வகையில் இவ்வளவு கோளாறுகள் இருந்த போதிலும் இந்த அளவு மாறுதலாவது மியான்மரில் ஏற்பட்டது கொஞ்சம் பாராட்டுகளைப் பெற்றது.

ஐரோப்பிய யூனியன், கனடா, அமெரிக்கா ஆகியவை நெடுங் காலமாகவே மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதித்துள் ளன. அதில் சின்ன மாறுதல்கள் உண்டாயின.

2011-ல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மியான்மருக்கு விஜயம் செய்தார். அங்கு பிரதமர் தெயின் ஸெயின் மற்றும் ஆங் சான் சூச்சி ஆகியோரை சந்தித்துப் பேசினார். 2012-ல் ஒபாமா அமெரிக்காவில் மீண்டும் அதிபரான பிறகு மியான்மரின் பிரதமர் தெயின் ஸெயின் வாஷிங்டனுக்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. உலக அளவில் மியான்மர் தன்னை இணைத்துக்கொள்ளத் தொடங்கியது என்று சிலர் கருதினார்கள். இதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் மியான்ம ருக்கு பெரும் கடன் தொகையை வழங்க முன் வந்தது.

மியான்மருக்குள்ளேயே உண்டான வேறொரு அமைதி ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்கது தான். மியான்மரில் உள்ள முக்கிய இனம் பர்மன் எனப்படுவது. திபெத்தியர்களுக்கு இவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம். மற்றபடி சின்னச் சின்னதாக நிறைய இனங்கள் மியான்மரில் உண்டு. இவர்களில் பலரும் அரசுக்கெதிராகச் செயல்பட்டனர். இதன் காரணமாக தீவிரவாதக் குழுக்களும் உருவாயின.

2015 மார்ச்சில் இந்த விதத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். 60 கலவரக் குழுக்களுடன் மியான்மர் அரசு ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மியான்மருக்குப் பல சிறப்புகள் உண்டு. அடர்ந்த காடுகளை மியான்மரில் நிறைய பார்க்கலாம். எண்ணிலடங்கா தேக்கு மரங்கள். தேக்கு ஏற்றுமதியில் உலக அளவில் மியான்மர்தான் முன்னணியில் இருக்கிறது. முத்துக்கள் முதல் ரூபி வரை பல வகை ரத்தினக் கற்கள் மியான்மரில் அதிக அளவில் உள்ளன. மியான்மரில் உள்ள பிரம்மாண்டமான பல புத்த ஆலயங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியவை.

ஆனால் ராணுவ அவலங்களில் மியான்மர் ராணுவத்தில் 18 வயது நிறையாத மிக இளம் வயதினர் பலர் உண்டு. வெறும் 40 டாலர் தொகைக்கும் ஒரு மூட்டை அரிசிக்கும் தங்கள் குழந்தைகளை ராணுவத்துக்கு விற்கிறார்கள். மியான்மர் ராணுவம் வேறொரு அநியாயத்துக்கும் பெயர் போனது. மனித உரிமை மீறல்களை எக்கச்சக்கமாக நடத்துகிறது. இவர்களால் பாலியல் பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள் ஏராளம். தவிர இதற்காக பல பெண்களை ராணுவம் வைத்திருந்தது. 2012 வரை இந்தப்போக்கு பரவலாகவே அங்கு காணப்பட்டது.

மின் வெட்டு என்பது மியான் மரில் மிக மிக சகஜம். சொல்லப் போனால் அந்த நாட்டில் நான்கில் ஒரு பகுதியினரின் வீடுகளில் மின் இணைப்பே கிடையாது. ஆனால் தங்கள் ‘ஜனநாயக வெட்டைத் தான்’ அவர்களால் இன்னமும் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x