Published : 28 Sep 2019 10:00 AM
Last Updated : 28 Sep 2019 10:00 AM

மதத்தை தீவிரவாதத்தோடு இணைக்காதீர்கள்: உலகில் ஒரு இஸ்லாம் மட்டுமே இருக்கிறது: பாக். பிரதமர் இம்ரான் கான் பேச்சு

நியூயார்க்

எந்த மதத்தையும் தீவிரவாதத்தோடு இணைத்துப் பேசாதீர்கள், உலகில் இஸ்லாம் என்று ஒரு மதம் மட்டுமே இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

ஐ.நா. சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக 7 நாட்கள் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இறுதியாக நேற்று ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சில் பாகிஸ்தான் குறித்து எந்தவிதமான நேரடியான தாக்குதலும், குறிப்புகளும் இடம் பெறவில்லை. ஆனால், தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்று திரள வேண்டும், ஐ.நா. உறுப்புநாடுகள் ஒற்றுமையுடன் அனுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். ஐ.நா.பொதுக்குழுக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசுவது இதுதான் முதல்முறையாகும். இவருக்கு பேசுவதற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் 50 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டார்.

பிரதமர் இம்ரான் கானின் பேச்சில் பெரும்பகுதி காஷ்மீர் குறித்துதான் இருந்தது. காஷ்மீரில் மக்கள் தடுப்புக்காவலில் இருப்பதாகவும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது குறித்தும் பேசினார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் விவகாரத்தால் போர்மூளும் சூழல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:

மேற்கத்திய நாடுகளில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டபின், இஸ்லாம் மதத்தின் மீதான பயம், அச்சம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இஸ்லாம் மதத்தின் மீதான அச்சம் பல்வேறு பிரிவுகளை உருவாக்கிவிட்டது. ஹிஜாப் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின்,

தீவிரவாதத்தையும், இஸ்லாம் மதத்தையும் இணைத்து மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
உலகில் இஸ்லாமியத் தீவிரவாதம் ஒன்று இல்லை. அனைத்து மதங்களிலும் உள்ள தனிமனிதர்களும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். காட்டுமிராண்டியாக நாம் வாழ்ந்ததில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் அனைத்து மதங்களிலும் இரக்கமும், நீதியும் போதிக்கப்படுகிறது.

தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு ஒப்பிட்டு சில தலைவர்கள் பேசி வருவது, முஸ்லிம் மக்களின் மனதில் பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது. அவர்களின் இந்த வார்த்தை எந்த செய்தியை உணர்த்துகிறது. நியூயார்க்கில் உள்ள முஸ்லிம்களை எந்த அடிப்படையில் சாதாரண முஸ்லிம், தீவிரவாத முஸ்லிம் என்று பிரிப்பீர்கள்.

காஷ்மீர் விவகாரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, அங்கிருக்கும் மக்களுக்கு எந்த தகவல்தொடர்பும் கிடைக்கவி்ல்லை. ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் 11 தீர்மானங்களில் முக்கியமான சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது.

சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகிறது. 120 கோடி மக்கள் இருக்கும் இந்தியச் சந்தையை பார்த்து பேசாமல் இருக்கப்போகிறார்களா, அல்லது, நீதிக்கும், மனிதநேயத்துக்கும் ஆதரவாக இருக்கப்போகிறார்களா.

நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான நேரம். காஷ்மீரில் இருக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அங்குள்ள அரசியல்வாதிகளை விடுவிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால் அதன்பின் ஏற்படும் சம்பவங்களுக்குகூட இந்தியா பாகிஸ்தான் மீதுதான் குறைகூறும்.

அணு ஆயுதம் கொண்ட இரு நாடுகள் நேருக்கு நேர் பிப்ரவரி மாதத்தில் மோதும் சூழல் ஏற்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்றது இந்தியா, அதை விசாரிப்பதற்குள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தின.

மரபுரீதியான போர் இரு நாடுகளுக்கு இடையே மூளும்பட்சத்தில், எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்தியாவைக் காட்டிலும் 7 மடங்கு பாகிஸ்தான் சிறிய நாடு. ஆனால், எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சரண் அடைவது அல்லது சுதந்திரத்துக்காக சாகும்வரை போரிடுவது.

இரு அணு ஆயுதம் தாங்கிய நாடுகள் போரிட்டால், அதன் முடிவு பேரழிவாக இருக்கும் என்பதை உலகத்துக்கு எச்சரிக்கிறேன். இது மிரட்டல் அல்ல, பயம். இவை ஏதும் நடக்காமல் பாதுகாப்பது ஐ.நாவின் கடமையாகும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், தீவிரவாத குழுக்களை ஒழிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஆனால், நாங்கள் தீவிரவாதிகளை ஒழிக்கவில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. எனக்கு இந்தியாவில் நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியாவுக்குச் செல்வதை விரும்புகிறேன். என்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தபின், இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்த்து வர்த்தகத்தை மேம்படுத்த எண்ணினேன். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x