Published : 27 Sep 2019 07:06 PM
Last Updated : 27 Sep 2019 07:06 PM

பாகிஸ்தானை உலுக்கிய குவாண்டீல் பலோச் ‘ஆணவக்கொலை’- சகோதரருக்கு ஆயுள் தண்டனை

கொல்லப்பட்ட குவாண்டீல் பலோச்.

லாகூர், பிடிஐ

பாகிஸ்தானின் சமூகவலைத்தள பிரபலமான 26 வயது குவாண்டீல் பலோச் என்ற பெண்ணைக் கொலை செய்த வழக்கில் அவரது சகோதரர் முகமது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது முல்டான் நீதிமன்றம்.

ஆனால் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பலோச்சின் இன்னொரு சகோதரர் அஸ்லம் ஷாஹீன், மதகுரு அப்துல் குவாவி உட்பட சிலர் விடுதலைச் செய்யப்பட்டனர்.

2016, ஜூலை 15ம் தேதி பஞ்சாப் மாகாணம் முல்டானில் பவுசியா அஸீம் என்ற குவாண்டீல் பலோச் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். குவாண்டீல் பலோச் தன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் வெளியிட்ட பெண் விடுதலை கோரும் கருத்துக்கள், விமர்சனங்கள் ஆகியவற்றினால் குடும்ப மானம் பறிபோனதால் அவரை கொலை செய்ததாக முகமது வாசிம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மேலும் தடய அறிவியலும் 35 சாட்சிகளும் வாசிமுக்கு எதிராகத் திரும்பின. இதனையடுத்து முல்டான் அமர்வு நீதிமன்ற நீதிபதி இம்ரான் ஷஃபி வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் வாசிமின் பெற்றோரும் உறவினர்களும் அவரை மன்னித்து விட்டோம் ஆகவே கோர்ட் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் கோர்ட் அவர்களது கோரிக்கையை கண்டிப்புடன் நிராகரித்தது.

ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் சுமார் 1000 பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர். இதனையடுத்து குடும்பத்தினர் கொலை செய்தவரை தாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறி விடுதலை கோரும் சட்டப்பிரிவை பாகிஸ்தான் நீக்கி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x