இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு எனது அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு எனது அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச
Updated on
1 min read

ராமேசுவரம்

இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தனது தலைமையிலான அரசினால் மட்டும் தான் தீர்வைக் கொடுக்க முடியும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16 அன்று அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் 7 முதல் பெறப்பட உள்ளது. இந்தத் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், இலங்கை சோஷலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தலைமையிலா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, "நீண்ட காலமாக நீடித்து வருகின்ற இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தனது தலைமையிலான அரசினால் மட்டும் தான் தீர்வைக் கொடுக்க முடியும்.

இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தற்போதைய அரசினால் முடியவில்லை.

இந்திய-இலங்கை இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தி இரண்டு தரப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண தயாராக இருக்கிறேன், என்றார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 13 அன்று கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கும் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு மூலம் தான் தீர்வு காண முடியும்" என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in