Published : 27 Sep 2019 11:54 AM
Last Updated : 27 Sep 2019 11:54 AM

முதல் முறையாக சுற்றுலா விசா வழங்கும் சவுதி அரேபியா: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிமுறைகள் தளர்வு

சவுதி அரேபியாவில் உள்ள அல்-உலா நகரில் இருக்கும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட சுற்றுலா இடம்

ரியாத்

வளைகுடா பகுதியில் இருக்கும் முஸ்லிம் நாடான சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

தன்னுடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாவுக்காக நாங்கள் அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம். இங்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வியப்படைவார்கள். இங்கு யுனெஸ்கோவின் 5 முக்கிய இடங்கள் இருக்கின்றன.

பாரம்பரியமான கலாச்சாரம், இயற்கை அழகு நிறைந்த இடங்கள் இருக்கின்றன. 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் விசா வழங்கும் திட்டம் சனிக்கிழமை முதல் (நாளை) செயல்படுத்தப்படும்.

வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குப் பிடித்த ஆடைகளை அணிந்து செல்லலாம். தற்போது சவுதியைச் சேர்ந்தபெண்கள் மேல் உடலை முழுமையாக மூடும் வகையில் ஆடை அணிவது கட்டாயம் என்ற நிலையில் அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரத்து செய்யப்படும்.

சவுதி அரேபியாவில் மது வகைகள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் விதிமுறையின் கீழ் மது விற்பனை செய்யப்படும்".

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தற்போது பணிக்காக வரும் வெளிநாட்டவர்கள் மெக்கா, மெதினா புனிதப் பயணம் வரும் முஸ்லிம் யாத்ரீகர்கள் ஆகியோருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த ஆண்டில் இருந்து சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும் விசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா வழங்கும் முறை தொடங்கப்பட உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 10 கோடி வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க சவுதி அரேபிய அரசு தி்ட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தற்போது இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வேலையின்மையைப் போக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் சவுதி நம்புகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x