Published : 27 Sep 2019 11:14 AM
Last Updated : 27 Sep 2019 11:14 AM

சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய இடங்களின் படங்களை வெளியிட்ட நாசா; நடந்தது என்ன?

வாஷிங்டன்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவி நிலவில் இறங்கிய பகுதி குறித்த படங்களை நாசாவின் எல்ஆர்ஓசி கருவி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

இதில், விக்ரம் லேண்டர் கருவி 'சாப்ஃட் லேண்டிங்' மூலம் தரையிறக்க இஸ்ரோ முயற்சித்த நிலையில், திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், நாசா வெளியிட்ட புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கருவி சாப்ஃப்ட் லேண்டிங்கில் விழவில்லை, 'ஹார்ட் லேண்டிங்' எனப்படும் தரையில் மோதி விழுந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் கடந்த 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் ஆவதைக் காண ஏராளமான முன்னாள் விஞ்ஞானிகள், இஸ்ரா விஞ்ஞானிகள் காத்திருந்தனர். நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியைக் காண பிரதமர் மோடியும் இஸ்ரோவுக்கு வந்திருந்தார்.

நிலவின் தென்துருவத்தில் உள்ள மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் எஸ் எனும் இரு பள்ளங்களுக்கு இடையே விக்ரம் லேண்டர் கருவியைத் தரையிறக்க விஞ்ஞானிகள் கடந்த 7-ம் தேதி முடிவு செய்திருந்தனர்.

ஆனால், திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் விக்ரம் லேண்டர் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ சார்பில் பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டும் முடியவில்லை. நிலவில் 14 நாட்கள் இருக்கும் வெயில் காலம் முடிந்து தற்போது நிலவில் அடுத்த 14 நாட்கள் குளிர்ந்த காலம் இருந்துவருவதால், ஏறக்குறைய விக்ரம் லேண்டர் கருவி செயலிழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே நாசாவின் லூனார் ரீகான் அசெயன்ஸ் ஆர்பிட்டர் கேமிரா (எல்ஆர்ஓசி) கருவி நிலவில் விக்ரம் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய பகுதியைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 17-ம் தேதி நாசாவின் இந்தக் கருவி இந்தப் பகுதியைக் கடந்து சென்றபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

இந்தப் புகைப்படம் நிலவின் தென்பகுதியில் விக்ரம் தரையிறங்கியதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து 150 கி.மீ. பரப்பளவில் எடுக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனம் மற்றும் வெளிச்சக் குறைவு காரணமாக புகைப்படங்களும் தெளிவாக இல்லை.

ஆனால், நாசாவின் கூற்றுப்படி, " இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவி நிலவின் தென்பகுதியில் சாஃப்ட் லேண்டிங் எனச் சொல்லப்படும் மெதுவாகத் தரையிறக்குதல் முறையில் இறங்கவில்லை. மாறாக, நிலவின் தரைப்பகுதியில் மோதி விழுந்துள்ளது. எந்த இடத்தில் விக்ரம் லேண்டர் கருவி விழுந்து இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எல்ஆர்ஓ கருவி இயக்கத்தின் துணைத் தலைவர் ஜான் கெல்லர் கூறுகையில், " நாசாவின் எல்ஆர்ஓ கருவி கடந்த 17-ம் தேதி எடுத்த விக்ரம் லேண்டர் கருவி குறித்து எடுத்த புகைப்படம் தெளிவாக இல்லை. ஏனென்றால் நிலவில் தற்போது கடும் குளிரும், இருளும் இருக்கிறது. மீண்டும் அக்டோபர் 14-ம் தேதி எல்ஆர்ஓ கருவி நிலவின் தென்துருவப் பகுதியைக் கடக்கும். அப்போது நிலவில் பகல் காலமாக இருக்கும். அப்போது எடுக்கும் புகைப்படம் தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்

நிலவில் வெளிச்சக் குறைவால் விக்ரம் தரையிறங்கிய பகுதியில் நிழல்கள் அதிகமாக இருந்ததால், புகைப்படங்கள் தெளிவாக இல்லை. விக்ரம் லேண்டர் கருவி மறைந்திருக்க வாய்ப்புண்டு. அக்டோர் மாதம் எல்ஆர்ஓ கருவி இப்பகுதியைக் கடக்கும் போது சாதகமான புகைப்படங்கள் வரவும், விக்ரம் லேண்டர் கருவி எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறியவும் முடியும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x