ஐ.நா.வில் ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: சாபர் துறைமுகம் குறித்து முக்கிய ஆலோசனை

ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

நியூயார்க்

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்து வரும் 74-வது ஆண்டு துக்குழுக் கூட்டத்தின் இடையே ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.

இரு தலைவர்களும் இருதரப்பு நாடுகளின் வர்த்தகம, பாதுகாப்பு, ஒத்துழைப்பு குறித்தும், ஈரானில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் சாபர் துறைமுகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 7 நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன் பங்கேற்ற பிரதமர் மோடி, அதன்பின் நியூயார்க் வந்து பருவநிலை உச்ச மாநாடு, பசிபிக் தீவுகள் நாடுகள் மாநாடு, தீவிரவாத ஒழிப்பு குறித்த வட்டமேசை மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.

அணுச் செறிவூட்டல் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்த தடைக்குப் பின் இந்தியா கடந்த மே மாதத்தில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது.

அதுமட்டுமல்லாமல், சவுதி அரேபியாவின் இரு முக்கிய கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதால், உலக நாடுகள் அந்நாட்டின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இந்த சூழலில் ஈரான் அதிபர் ரவ்ஹானி - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், " ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் இரு நாடுகளின் கூட்டுறவு குறித்தும், பிராந்தியத்தில் நிலவும் விஷயங்கள் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


குறிப்பாக ஈரானில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் சாபர் துறைமுகம் குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் நுழைவதற்கு முக்கியமான பகுதி என்பதால், இந்த துறைமுகத்தை அமைக்க இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

தூதரக உறவு, பேச்சுவார்த்தை, அமைதி, பாதுகாப்பு மற்றும் வளைகுடா பகுதியில் நிலைத்தன்மை உருவாக இந்தியா தொடர்ந்து முன்னுரிமையும், ஆதரவும் அளிக்கும் என்று பிரதமர் மோடி வலியறுத்தினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிர்கிஸ்தான், பிஷ்கெக் நகரில் ஜூன் மாதம் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் இரு தலைவர்களும் பங்கேற்ற நிலையிலும் சந்தித்துக்கொள்ளவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு ஈரான் சென்றிருந்த பிரதமர் மோடி, இரு நாட்டு நட்புறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 12க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in