

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக மீட்பூர் நகரில் கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
முன்னதாக, பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்லமாபாத், பெஷாவர், லாகூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் 8 முதல் 10 நொடிகள் வரை நீடித்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 37 பேர் பலியாகினர். 500 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தினால் தகவல் தொலைத் தொடர்புகள், சாலைகள், மின்சார இணைப்புகள் போன்றவை மீர்பூர் பகுதியில் மோசமான சேதத்துக்கு உள்ளாகின. இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.