

ராமேசுவரம்
இலங்கையில் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நவம்பர் 16 அன்று இலங்கை அதிபர் தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் 7 முதல் பெறப்பட உள்ளது.
இந்தத் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், இலங்கை சோஷலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக மீண்டும் மைத்ரிபால சிறிசேனாவையே இம்முறையும் தேர்தலிலும் களமிறங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனினும், மைத்ரிபால சிறிசேனா தன்னுடைய நிலைப்பாடு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசாவும், நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவும் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதுடன் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளும் நிலவி வந்தது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் கொழும்புவில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக களமிறக்க கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தெரிவித்ததையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஏகமனதாக சஜித் பிரேமதாசாவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வீட்டு வசதி துறை அமைச்சருமான சஜித் பிமேரதாசா (52) மறைந்த முன்னாள் இலங்கை அதிபர் ரணசிங்கே பிரேமதாசாவின் மகனும் ஆவார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக குழப்பம் நீடித்த நிலையில் சஜித் பிரேமதாசாவே வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இலங்கையின் பல பகுதிளில் வெடி வெடித்து தங்களது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர்.
எஸ். முஹம்மது ராஃபி