இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 6 பேர் பலி

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 6 பேர் பலி
Updated on
1 min read

இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

நிலநடுக்கம் குறித்து அமெரிக்கப் புவியியல் மையம், “கிழக்கு இந்தோனேசியாவின் தொலைதூர மாலுகு தீவுகளில் உள்ள மாலுகு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலுகு மாகாணத்தைச் சேர்ந்த அம்போனுக்கு வடகிழக்கில் 37 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:46 மணிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியது” என்று தெரிவித்துள்ளது.

பல இடங்களில் கட்டிடங்கள் சரிந்துள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில் நிலநடுக்கத்துக்கு இதுவரை 6 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கடியில் பூமியின் ஆழத்தில் உள்ள டெக்டோனிக் தகடுகள் மோதுகின்ற இந்த பசிபிக் பகுதி ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் நெருப்பு வளையத்தில் உள்ளது. அதன் நிலை காரணமாக இந்தோனேசியா அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்கு ஆளாகி வருகிறது.

கடந்த ஆண்டு, சுலவேசி தீவில் உள்ள பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமியால் 4,300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

டிசம்பர் 26, 2004 அன்று, சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் சுனாமியைத் தூண்டியது. இந்தோனேசியாவில் சுமார் 1,70,000 பேர் உட்பட இப்பகுதி முழுவதும் 2,20,000 பேர் கொல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in