

இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் தொடர்ந்து காலநிலை மாற்றத்துக்கு எதிரான பருவச் சூழல்களைச் சந்திந்து வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளும், ஆசிய நாடுகளும் அதிகபட்ச வெப்ப நிலையையும், மழைப் பொழிவையும் சந்தித்தன.
இதில் அதிகபட்சமாக பிரான்ஸ் நாடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையைச் சந்தித்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் வெப்ப நிலை காரணமாக இமயமலையின் பனிப்பாறைகள் உயர்ந்து வருவதால், 2100-ம் ஆண்டுக்குள் சென்னை, மும்பை , சூரத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் மூழ்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு கூறுகையில், ''கடல் மட்டம் முன்பு இல்லாததைவிட உயர்ந்து வருகிறது. இமயமலை உருகி வருவதல் கடல் மட்டம் உயர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் உட்பட இந்திய நகரங்கள் இந்த நூற்றாண்டுக்குள் மூழ்கும் நிலை உருவாகலாம். இதன் காரணமாக உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள” என்று தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க கரியமில வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.