Published : 26 Sep 2019 02:03 PM
Last Updated : 26 Sep 2019 02:03 PM

சர்வதேச நிதியத்துக்கு புதிய தலைவராக கிறிஸ்டாலினா ஜார்ஜீவா தேர்வு

வாஷிங்டன்,

ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்திற்கு புதிய தலைவராக பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டாலினா ஜார்ஜீவா (66), பல்கேரியாவின் கம்யூனிச அரசாங்கத்தில் ஒரு மைய- வலதுசாரியாகவே அவர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2017லிருந்து உலக வங்கியின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் தனக்கென்று ஒரு நற்பெயரை உருவாக்கிக்கொண்டார்.

ஐரோப்பாவின் வளர்ச்சி, நிர்வாகம், பட்ஜெட், மனிதவளம் உள்ளிட்ட பிரிவுகளில் 2010லிருந்து 2016 வரை துறைசார்ந்த ஆணையர் பதவிகளை வெவ்வேறு காலகட்டங்களில் அலங்கரித்தவர்.

பாலின சமத்துவத்தின் சாம்பியன் என்று அழைக்கப்படும் ஜார்ஜீவா காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் தலைவராகவும் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறுகையில், "இது மிகப்பெரிய பொறுப்பு. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறைந்து, கடன்களும் பதட்டங்களும் வரலாற்று ரீதியாக மிகவும் அதிகரித்து வரும் இத்தகைய நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொறுப்பு என்பது மிகவும் சவாலானது. எனினும் உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உடனடி முன்னுரிமை அளிப்பதோடு சரிவுகளையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

189 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட ஐஎம்எஃப் ஓர் உலகளாவிய கூட்டுறவு நிதி அமைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் வறுமையைக் குறைப்பதற்காகச் செயல்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் தலைமை ஒரு ஐரோப்பிய நாடு என்பது அதன் பாரம்பரியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x