ஜமால் கொலை என் கண்முன் நடந்தது: சவுதி இளவரசர் முகமது சல்மான்

ஜமால் கொலை என் கண்முன் நடந்தது: சவுதி இளவரசர் முகமது சல்மான்
Updated on
2 min read

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் கொலை தன் கண் முன்தான் நடந்தது என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிபிஎஸ் தொலைக்காட்சியின் ஆவணப்பட முன்னோட்டத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் சவுதி இளவரசர் முகமது சல்மான், ''ஜமாலின் மரணத்துக்கான எல்லாப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் ஜமாலின் மரணம் என் கண்முன்னால் தான் நடந்தது" என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆவணப்படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர் ஜமால்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து ஜமால் தொடர்பாக நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தன. சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.

இதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் துருக்கி கூறியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் சவுதியைக் கண்டித்தனர். இந்த நெருக்கடியை அடுத்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக முதன்முறையாக சவுதி ஒப்புக்கொண்டது.

இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது. மேலும் சவுதி இளவரசரின் செல்வாக்கும் சரிந்தது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்தனர். மேலும், துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தது.

ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் ஜமாலின் கொலை தன் கண் முன்னால்தான் நடந்தது என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in