Published : 26 Sep 2019 12:13 PM
Last Updated : 26 Sep 2019 12:13 PM

விரைவில் இஸ்லாமிய ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்: இம்ரான் கான் அறிவிப்பு

நியூயார்க்,

உலக அளவில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுவரும் இஸ்லாமோ போபியா உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள பாகிஸ்தான், துருக்கி மற்றும் மலேசியா நாடுகள் இணைந்து ஒரு ஆங்கில மொழி தொலைக்காட்சி சேனலைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

ஐ.நா. வந்துள்ள பாக். பிரதமர் இம்ரான் கான் உலக அளவில் இஸ்லாம் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று (புதன்கிழமை) 74-வது ஐ.நா. சபை பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்தார். அங்கு மலேசியா, துருக்கி நாட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஓர் உயர்மட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினார்.

'வெறுக்கத்தக்க பேச்சை எதிர்கொள்வது' குறித்த வட்டமேசை விவாதம் ஒன்றை பாகிஸ்தான், மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின.

இப்பேச்சுவார்த்தை நடத்திய சிறிது நேரத்திலேயே மூன்று நாடுகளின் கூட்டு முயற்சியின் கீழ், தொலைக்காட்சி தொடங்கும் அறிவிப்பை இம்ரான் கான் வெளியிட்டார். உலக அளவில் முஸ்லிம் மக்கள் சார்ந்த புரிதல் மிகச்சரியாக சென்று சேரும் வகையில் பயனுள்ள நடவடிக்கைகளுக்கு இம்ரான் அழைப்பு விடுத்தார்,

இதுகுறித்து நேற்று புதன்கிழமை இரவு ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ள இம்ரான் கான் அதில் கூறியுள்ளதாவது:

''ஜனாதிபதி எர்டோகன், பிரதமர் மகாதீர் மற்றும் நானும் இன்று (புதன்கிழமை) ஒரு கூட்டத்தை நடத்தினோம், அதில் எங்கள் மூன்று நாடுகளும் கூட்டாக ஓர் ஆங்கில மொழி சேனலைத் தொடங்க முடிவு செய்தோம். இஸ்லாமோ போபியா ஏற்படுத்திவரும் சவால்களை எதிர்கொள்ளவும் நமது பெரிய மதமான இஸ்லாம் குறித்து நேர்மையான பதிவுகளை முன்வைக்கவும் இந்த தொலைக்காட்சி அர்ப்பணிக்கப்படுகிறது.

இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கக் கூடிய தவறான எண்ணங்கள் சரி செய்யப்படும்; இறை நிந்தனை பிரச்சினைகளின் சூழல் குறித்து ஆராய்ந்து ஒழுங்குபடுத்தப்படும். எங்கள் சொந்த மக்களை வழிநடத்த / உலகுக்குத் தெரிவிக்க முஸ்லிம் வரலாற்றுத் தொடர் மற்றும் திரைப்படங்கள் தயாரிக்கப்படும்; முஸ்லிம்களுக்கு என்று ஒரு பிரத்யேகமான ஊடக இருப்பாக இது அமையும்''.

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x