

நியூயார்க்
இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள், காஷ்மீர் விவகாரத்தை அவர்கள் சரியான முறையில் பேசி தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலானது. இதில் மூன்றாவது நாடு தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்மாமல் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப் அப்போது அந்தப் பேச்சு குறித்து ஏதும் குறிப்பிடாமல் இருந்துவிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடான சந்திப்பின்போது பிரதமர் மோடியின் பேச்சு "மிகவும் முரட்டுத்தனமானது" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப் " நான் இந்தியப் பிரதமர் பேச்சைக் கேட்டேன். மிகவும் முரட்டுத்தனமான பேச்சு அது. அவர் பேசும்போது நான் மேடையில்தான் இருந்தேன். இப்படிப்பட்ட பேச்சை நான் கேட்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அங்குதான் அமர்ந்திருந்தேன்" எனத் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என பலமுறை தெரிவித்தும் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாகக் குறிப்பிட்டு வருகிறார். ஏற்கெனவே பிரதமர் மோடியை இரு முறை சந்தித்த போதெல்லாம் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறிவிட்டு, பாகிஸ்தான் பிரதமருடன் பேசும்போது காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அதிபர் ட்ரம்ப் பேசி நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்.
இந்தநிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ட்ரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களிடம் பேசினேன். இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யவோ, சமரசம் ஏற்படுத்தவோ தயாராக உள்ளேன் என அவர்களிடம் தெரிவித்தேன்.
எனினும் இதற்கு இருநாடுகளும் சம்மதித்தால் மட்டுமே வாய்ப்புண்டு. இருவரும் அணு ஆயுதங்களை வைத்துள்ள அண்டைநாடுகள்.
அவர்கள் சரியான முறையில் செயல்படுவார்கள் என நம்புகிறேன். பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரண்டு அண்டை நாடுகளும் அதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.