

நியூயார்க்
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். ஐ.நா.வில் நடக்கும் ஆண்டுபொதுக் குழுக் கூட்டத்தில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றும் முன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உலகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் சேர்ந்து பங்கேற்றார். அதன்பின் ஐ.நா.வில் அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார். இரு தலைவர்களும் ஏறக்குறைய 40 நிமிடங்கள் பேசினார்கள்.
பிரதமராக மோடி 2-வது முறையாக பதவி ஏற்றபின் 4-வது முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேற்றுச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பிற்கு பரிசாக வழங்கினார்.
இரு தலைவர்களும் இருநாட்டு நட்புறவு, தொழில், வர்த்தகம், பாதுகாப்பு, உலகப் பிரச்சினைகள், காஷ்மீர் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் நேற்று அந்நாட்டு தொழில், வர்த்தக குழுக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். புளும்பெர்க் வர்த்தக அமைப்பு உள்ளிட்ட வர்த்தக குழுக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.
இதில் பேசிய பிரதமர் மோடி, ‘‘அணுசக்தியை பயன்படுத்தி எரிபொருள் தயாரிப்பது என்பது இன்றளவும் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. இதற்கு காரணம் அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாததே காரணம்.
அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைததால் உலகிற்கே முன்னுதாரணமாக இந்தியா திகழும். அதனை நோக்கி நாங்கள் நகர்கிறோம்’’ என்றார்.
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.