

வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ஈரானுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் 74-வது ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இது வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா மோதல் குறித்து ஐ. நா. பொதுக்குழுவில் ட்ரம்ப் ஈரான் அதிபருடன் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்த திட்டம் ஏதும் இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரானுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூயார்க்கில் இம்ரான் கான் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ஈரானுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நிச்சயம் எங்களால் முயன்றதைச் செய்வோம்.
ட்ரம்ப்புடன் பேசியதைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆனால் அது தொடர்பாக என்னால் விளக்கமாக தற்போது கூறமுடியாது. சவுதி இளவரசரும் எண்ணெய் ஆலை தாக்கப்பட்டது தொடர்பாக ஈரான் அதிபருடம் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
ஈரான் - அமெரிக்கா மோதல்
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
மேலும் சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.