Published : 25 Sep 2019 10:40 AM
Last Updated : 25 Sep 2019 10:40 AM

பிரதமர் மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது: பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு வழங்கியது

நியூயார்க்

இந்தியாவில் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத் இயக்கம்) திட்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் எனும் விருதை பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கியது.

2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் மோடி 2014, அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத் அபியான்) திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக் கழிப்பறை அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று மத்திய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புறங்களில் சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கிலும், மிகப்பெரிய வெற்றியாக மாற்றி தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உள்ள பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 'குளோபல் கோல்கீப்பர்' விருதை நேற்று வழங்கியது.

இந்த விருது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கூறி, பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும், என்னை உலக அளவில் மரியாதைக்குரியவராக்கிய என் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படும் ஆண்டில் இந்த விருது எனக்கு அளிக்கப்படுவது தனிப்பட்ட முறையில் மிகவும் பெருமைக்குரியது, முக்கியத்துவமானது. 130 கோடி மக்களும் உறுதி எடுத்துக்கொண்டால், எந்த சவாலையும் நம்மால் கடந்துசெல்ல முடியும்.

இந்த விருதை நான் என் தேசத்துக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களால்தான் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) பிரச்சாரம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் சுத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இதற்கு முன் எந்த நாட்டிலும் இதுபோன்ற பிரச்சாரத்தை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்தப் பிரச்சாரம், திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம், ஆனால், மக்கள்தான் இதைச் செயல்படுத்தினார்கள்.

இத்திட்டத்தால் ஏறக்குறைய 11 கோடி கழிப்பறைகள் கடந்த 5 ஆண்டுகளில் கட்டப்பட்டது மிகப்பெரிய சாதனை. இத்திட்டத்தின் வெற்றியை வெறும் எண்ணிக்கையால் மதிப்பிட முடியாது. ஏழை மக்களும், தேசத்தில் உள்ள ஏழை பெண்களும் இத்திட்டத்தால் அதிகம் பயனடைந்துள்ளார்கள்.

கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், ஏராளமான பெண் குழந்தைகள் பள்ளி செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி இருந்தார்கள். எங்களுடைய மகள்கள் படிக்க வேண்டும், ஆனால், கழிப்பறைகள் போதுமானதாக இல்லாததால், அவர்களின் கல்வி பாதியில் நிறுத்தப்பட்டு வீட்டிலேயே முடங்கினார்கள்.

தேசத்தில் உள்ள பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உதவி செய்து, அவர்களை வெளியே வர வைக்க வேண்டும் என்பதே அரசின் பொறுப்பு. கடமை. உலக சுகாதார அமைப்பும் எங்களின் பணியை அங்கீகரித்துள்ளது. ஸ்வச் பாரத் இயக்கத்தின் மூலம் நாங்கள் 3 லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம்.

பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் இந்தியாவில் வந்து கிராமப்புறங்களில் இருக்கும் சுகாதார நிலையை ஆய்வு செய்து முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று அறிக்கை அளித்ததுள்ளது. சுகாதாரம் முன்னேற்றம் அடைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே இதயக் கோளாறுகள் குறைந்து உடல்நிலைக் குறியீடு மேம்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் சுகாதாரத் திட்டக் கனவு நினைவேறி வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கிராமங்கள் சுகாதாரமாக முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று காந்தி ஜி அடிக்கடி கூறுவார். இன்று நாங்கள் இந்த நாட்டையே முன்மாதிரியாக மாற்றி வருகிறோம்.

தூய்மை இந்தியா பிரச்சாரம் கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது. ஐ.நா. நிர்ணயித்த இலக்குகளையும் அடையவும் குறிப்பிட்ட பங்களிப்பு செய்துள்ளது''.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x