

ஜெருசேலம்
இஸ்ரேல் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒருவாரம் ஆகியும், இன்னும் புதிய அரசு அமையாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், அங்குள்ள இரு முக்கியக் கட்சிகளின் தலைவர்களான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸ் இடையே சமரசப் பேச்சு தொடங்கியுள்ளது.
20 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி, எதிர்க்கட்சியும் இடதுசாரியான பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொயிட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி 31 இடங்களும் அவரின் வலது சாரி கூட்டணிக்கு 55 இடங்கள் கிடைத்தன.
எதிர்க்கட்சியான பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி 33 இடங்கள் உள்ளிட் அவரின் கூட்டணிக்கு 54 இடங்களும் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை.
பிரதமர் நெதன்யாகு மீண்டும் பிரதமராகவதற்கு இன்னும் 6 எம்.பிக்கள் இருந்தால் போதுமானது,அதேசமயம் பென்னி கான்ட்ஸ் பிரதமராக அவருக்கு 7 எம்பிக்கள் தேவை. ஆனால் இருகட்சியினருக்கும் இடையே எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாமல் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.
இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் : கோப்புப்படம்
இதில் 8 இடங்களை வைத்துள்ள இஸ்ரேல் பெய்டினு கட்சியின் தலைவர் அவிக்டர் லிபர்மன் இரு கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க மறுத்து மதச்சார்பற்ற அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து வருகிறார்.
இதனால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, அதிபர் ருவென் ரிவ்லின் தலையிட்டு ஒவ்வொரு கட்சியின் தலைவராக கடந்த இரு நாட்களாக அழைத்துப் பேசி வருகிறார்.
இதனிடையே முக்கியக் கட்சியான லிக்குட் கட்சியின் தலைவர் நெதன்யாகு, ப்ளூ அன்ட் வொய்ட் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்ஸ் ஆகியோரை நேற்று அதிபர் ரிவ்லின் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, அதிபர் ரிவ்லின் " இரு கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவுக்கு வருமாறும் நாட்டில் 3-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் சூழலை ஏற்படுத்திவிடவேண்டாம் என்றும், மக்கள் நிலையான ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் " என அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து லிக்குட் கட்சியின் தலைவர் நெதன்யாகு, ப்ளூ அன்ட் வொய்ட் கட்சியின் தலைவர் கான்ட்ஸ் ஆகியோர் தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறையாக இன்று சந்தித்து பேசியுள்ளனர். இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் யார் பிரதமராகவது அல்லது ஆட்சியை சரிசம ஆண்டுகள் பிரித்துக்கொள்வதா என்ற முடிவு எட்டப்பட்டு கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஐ