

இங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரானைக் குற்றம் சாட்டியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் ஆகியோர் சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அக்கூட்டறிக்கையில், “ இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் தான் உள்ளது என்று எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஆர்வமுள்ள எங்களது அனைத்துக் கூட்டாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. நாங்கள்தான் நடத்தினோம் என்றால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரான் மீது பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.