Published : 24 Sep 2019 03:20 PM
Last Updated : 24 Sep 2019 03:20 PM

போராட்டம், ஆவேசப் பேச்சு: 5 நாடுகளுக்கு எதிராக 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க் ஐ.நா.வில் புகார் 

16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க் ஐநாவில் பேசிய காட்சி.

நியூயார்க்

காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் வேகமான நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா.வில் போராட்டம் நடத்திய 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க், உலக வெப்பமயமாதலைத் தடுக்க போதுமான அக்கறை காட்டாத 5 நாடுகளுக்கு எதிராக ஐ.நா.வில் புகார் அளித்துள்ளார்.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டீனா, துருக்கி ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் உரிமை தொடர்பான ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை என்று அந்தப் புகாரில் துன்பெர்க் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா.பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்த வருகிறது. இது வரும் 30-ம் தேதிவரை நடக்கிறது. ஐ.நா.வில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதேசமயம், காலநிலை மாற்றத்தில் இருந்து புவியைக் காக்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 1 6வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த மாநாட்டில் துன்பெர்க்கும் பங்கேற்றுள்ளார்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் 5 நாடுகள் போதுமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் குழந்தைகளின் உரிமையை மீறிவிட்டதாக துன்பெர்க் மற்றும் 8 வயது முதல் 17 வயதுடைய சிறுமிகள் 15க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட அந்த 5 நாடுகள் குழந்தைகளின் உரிமையை மீறிவிட்டதாக ஐ.நா.வில் துன்பெர்க் புகார் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காத நாடுகளையும் துன்பெர்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, குழந்தைகள் தங்களின் உரிமை மீறப்பட்டதாக ஏதேனும் உணர்ந்தால், அவர்கள் ஐநாவில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழுவில் தங்களின் புகாரை அளிக்கலாம். அந்த அடிப்படையில் துன்பெர்க் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தி, பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த தங்களின் பரிந்துரைகளை ஐ.நா.வில் அளிக்கும். ஐ.நா.வில் புகார் அளித்த துன்பெர்க் தலைமையிலான 16 சிறுமிகளுக்கு ஹாஸ்பீல்ட் மற்றும் எர்த் ஜஸ்டிஸ் என்ற சட்டநிறுவனம் ஆதரவு தெரிவித்து வாதிடுவதாகத் தெரிவித்துள்ளது

அந்தச் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் மைக்கேல் ஹாஸ்பீல்ட் கூறுகையில், " குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்குழுவின் பரிந்துரைகளுக்கு நாடுகள் பணிய வேண்டியது சட்டரீதியாக அவசியம் இல்லை. ஆனால், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட நாடுகள் இதை மதிப்பது தார்மீகம். இந்தப் பரிந்துரைகள் அடுத்த 12 மாதங்களில் ஐ.நா.வில் தாக்கலாகும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x