Published : 24 Sep 2019 11:23 AM
Last Updated : 24 Sep 2019 11:23 AM

தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்தோம்; 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவுடன் நாங்கள் சேர்ந்தது மிகப்பெரிய தவறு: இம்ரான் கான் ஒப்புதல்

நியூயார்க்

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், நாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்ததுதான் மிகப்பெரிய தவறு. எங்களால் அளிக்க முடியாததை, முந்தைய அரசுகள் வழங்குவதாக உறுதியளித்து இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

நியூயார்க் நகரில் ஐ.நா.பொதுக்குழுக் கூட்டம் இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூயார்க் நகரம் வந்துள்ளார்.

ஐ.நா.வில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் தரப்பில் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நியூயார்க்கில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பின் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுடன் நாங்கள் இணைந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம்.

அமெரிக்காவுடன் நாங்கள் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய போரில் 70 ஆயிரம் பாகிஸ்தானிய வீரர்களை இழந்திருக்கிறோம். சில பொருளாதார வல்லுநர்கள் எங்களுக்கு 15,000 கோடி டாலர் இழப்பு என்றும், சிலர் 20,000 கோடி டாலர் இழப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானை வெல்ல முடியவில்லை என்றே தொடர்ந்து அமெரிக்காவை நாங்கள் குறை கூறிவருகிறோம்.

என்னைப் பொறுத்தவரை இதற்கு முன் ஆட்சியில் இருந்த பாகிஸ்தானிய அரசுகள், தங்களால் முடியாதவற்றைச் செய்து கொடுப்பதாக அமெரிக்காவிடம் வாக்குறுதி அளித்திருக்கக் கூடாது. (குறிப்பாக பர்வேஷ் முஷாரப்பை குற்றம் சாட்டினார்)
கடந்த 1980களில் ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் சிறைபிடித்தன. அப்போது பாகிஸ்தான், அமெரிக்காவுக்குத் துணையாக இருந்தது. சோவியத் படைகளை விரட்ட பாகிஸ்தான் உதவியது.

இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை வைத்து சோவியத் படைகளுக்கு எதிராக நாங்கள் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்தோம். அனைத்து முஸ்லிம்களையும் ஜிதாகி போருக்கு அழைத்துப் பயிற்சி அளித்தோம்.

சோவியத் படைக்கு எதிராகப் போராட தீவிரவாதக் குழுக்களை நாங்கள் உருவாக்கினோம், அல்கொய்தா போன்ற குழுக்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்தோம். அப்போது ஜிகாதிகள்தான் ஹீரோக்களாகத் தெரிந்தனர். 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு சோவியத் படைகள் வெளியேறின. அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேறியது. நாங்கள் அந்த தீவிரவாதக் குழுக்களை அப்படியே விட்டுவிட்டோம்.

ஆனால், தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் நாங்கள் பயிற்சி அளித்த தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட அமெரிக்காவுடன் நாங்கள் சேர்ந்ததுதான் மிகப்பெரிய தவறு.

நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை 180 டிகிரி திருப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். எங்களின் நிலைப்பாட்டை யாரும் ஏற்கவில்லை, ராணுவத்தினரும் ஏற்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்குள் நாங்கள் தாக்கப்பட்டோம்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூலம் தீர்வு காணமுடியாது. அதிபர் ட்ரம்ப், மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். 19 ஆண்டுகளாக உங்களால் வெல்லமுடியாதபோது, இன்னும் 19 ஆண்டுகளாலும் உங்களால் வெல்ல முடியாது.

எங்கள் நாடு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. என்னுடைய முதலாம் ஆண்டு ஆட்சி மிகவும் கடினமாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சு மீண்டும் தொடங்கப் பட வேண்டும். தேர்தல் நடந்து முடிந்த பின் மீண்டும் பேச்சு தொடங்கும் என்று காத்திருந்தோம். ஆனால், இந்தியா எங்களை தீவிரவாதத்துக்கு நிதி வழங்கும் நாடுகள் பட்டியலில் சேர்த்து எங்களை நெருக்கடியில் தள்ளுகிறது

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வின் சிம்லா ஒப்பந்தத்தை மதித்து இரு நாடுகளும் நடக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐநா. முக்கியமாகத் தலையிட வேண்டும்''.

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x