

நீங்கள் எனது கனவுகளையும் எனது குழந்தைப் பருவத்தையும் வெற்று வார்த்தைகளால் திருடி வீட்டீர்கள் என்று பருவநிலை மாற்றம் குறித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கிரெட்டா துன்பெர்க் உலகத் தலைவர்களை விமர்சித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுகளும், உடனடி நடவடிக்கைகளும் அவசியம் என்று பேசினர்.
இந்நிலையில் பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நீங்கள் எனது கனவுகளையும் எனது குழந்தைப் பருவத்தையும் வெற்று வார்த்தைகளால் திருடிவீட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம். மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வருத்தமடைந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம் பற்றியும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விசித்திரக் கதைகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?
நாங்கள் கூறுவதை நீங்கள் கேட்பதாகவும், அதற்கான அவசரத்தைப் புரிந்து கொள்வதாகவும் கூறுகிறீர்கள். நான் எவ்வளவு கோபமாக, சோகமாக இருந்தாலும் நீங்கள் புரிந்துகொள்வதாகக் கூறுவதை நான் நம்பவில்லை.
நீங்கள் இங்கு நடக்கும் உண்மை நிலைமையைப் புரிந்துகொண்டு அதனைச் செயல்படத் தவறினால் நீங்கள் தீயவர்களாக இருக்கப் போகிறீர்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் உங்கள் துரோகத்தைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். எதிர்காலத் தலைமுறையின் கண்கள் அனைத்தும் உங்கள் மீது தான் உள்ளது. நீங்கள் எங்களைத் தோல்வியடைய அனுமதித்தால் நாங்கள் நிச்சயம் உங்களை மன்னிக்கமாட்டோம்”.
இவ்வாறு கிரெட்டா துன்பெர்க் கண்ணீருடன் தனது வேதனையைப் பதிவு செய்தார்.
முன்னதாக, கடந்த மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கிரெட்டா அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவைச் சந்தித்தார். கிரெட்டா ட்ரம்ப்பைப் பார்ப்பதற்காக பரிந்துரையையும் நீக்கினார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “அவர் நான் பேசுவதைக் கவனிக்காதபோது நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கிரெட்டா பங்கேற்றுப் பேசியதிலும் இது வெளிப்பட்டது.