Published : 24 Sep 2019 09:59 AM
Last Updated : 24 Sep 2019 09:59 AM

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாக் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம்

நியூயார்க்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் சிறந்த நடுவராக இரு நாடுகளுக்கும் இடையே இருப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலானது. இதில் மூன்றாவது நாடு தலையிடுவது சரியல்ல என்று இந்தியா பல முறை வலியுறுத்தியிருந்தும் அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் இன்று (24-ம் தேதி) தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

இதேபோல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ளார். ஐ.நா. சபையில் நேற்று அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

அப்போது, பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், " காஷ்மீர் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வருகிறது. வல்லரசான அமெரிக்காவுக்கு இதில் தலையீடுவதற்கு பொறுப்பு இருக்கிறது" என அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கு இம்ரான் கானிடம் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், "என்னால் உதவ முடியுமென்றால், நிச்சயம் உதவ முடியும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

அதன்பின் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சம்மதித்தால் நான் மத்தியஸ்தம் செய்யத் தராயாக இருக்கிறேன். நான் மத்தியஸ்தம் செய்வதில் சிறந்தவர், நல்ல நடுவராக இருப்பேன். எனக்கு இந்தியப் பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நல்ல நட்புறவு இருக்கிறது. நான் நடுவராக நிச்சயம் தோல்வி அடையமாட்டேன்.

ஹவுடி மோடி கூட்டத்தில் நான் பிரதமர் மோடியுடன் பங்கேற்றேன். தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி மிகவும் ஆவேசமான கருத்துகளைத் தெரிவி்தார். இரு நாடுகளுக்கும் நலம் பயக்கும் நல்ல முடிவுகளை இந்தியாவும், பாகிஸ்தானும் எடுக்கும் என நம்புகிறேன். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. என்னுடைய இடத்தில் வேறு அதிபர் யாரேனும் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தானை நடத்துவது வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

நான் பாகிஸ்தானை நம்புகிறேன். ஆனால், எனக்கு முன்பு இருந்தவர்கள் நம்பவில்லை. பாகிஸ்தானியர்கள் என்ன செய்தார்கள் என அவர்களுக்குத் தெரியாது".

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x