

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய - அமெரிக்க வாழ் சிறுவனின் செல்ஃபி ஆசையை மோடியும், ட்ரம்ப்பும் நிறைவேற்றியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியப் பிரதமர் மோடி சென்றுள்ளார். அதில் முதல்கட்டமாக,
டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து மோடி பங்கேற்றார்.
சுமார் 50,000க்கும் அதிகமான இந்திய அமெரிக்க வாழ் மக்கள் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் இருவரும் இணைந்து பயங்கரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்துப் பேசினர்.
பின்னர் இருவரும் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தை கை கோத்துச் சுற்றி வந்தனர்.
அப்போது சிறுவன் ஒருவன் ட்ரம்ப், மோடியிடம் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்க, அச்சிறுவனுக்காக சற்று நேரம் நின்று இரு தலைவர்களும் சிறுவனின் ஆசையை நிறைவேற்றினர்.
இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இளைஞர்களுடன் உரையாடியது மறக்க முடியாத தருணம் என்று பதிவிட்டுள்ளார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி நியூயார்க் சென்றுள்ளார்.