

நியூயார்க்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல் வலிக்கு க்ரீம் தடவிய பெண்ணுக்கு ரத்தம் நீல நிறமாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கடந்த பல நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பல் வலிக்காக வலி நீக்கி க்ரீம் ஒன்றை பற்களின் மேற்புறத்தில் தடவியுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அப்பெண்ணின் உடல் முழுவதும் நீல நிறச் சாயம் பூசியது போன்று மாறியுள்ளது.
இதையடுத்து பதறிப்போன அப்பெண், அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையில், அவரின் நரம்பு மற்றும் ரத்தக்குழாயில் இருந்து ரத்தம் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில், இரண்டிலும், அவரது ரத்தம் நீல நிறமாகவே இருந்துள்ளது. ஆரோக்கியமான உடலில், நரம்பு மற்றும் ரத்தக்குழாயிலிருந்து பெறப்படும் ரத்தம் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
25 வயதுப் பெண்ணுக்கு நீல நிறத்தில் ரத்தம் மாறிய சம்பவம், 'நியூ இங்கிலாந்து' எனும் மருத்துவ ஆய்விதழில் இடம்பெற்றுள்ளது.
அதில், நீல நிறத்தில் ஒருவரின் உடல் மாறுவதற்கு 'சயனோட்டிக்' என்று பெயர். ரத்தம் நீல நிறமாக மாறுவதற்கு 'மெதெமோகுளோபினிமியா' என்று பெயர். ஒருவரின் உடலிலுள்ள ரத்தத்தில் இரும்புச்சத்து வேறொரு தன்மையை அடையும்போது ரத்தம் நீல நிறமாக மாறலாம் என மருத்துவ ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.