Published : 23 Sep 2019 04:20 PM
Last Updated : 23 Sep 2019 04:20 PM

பிரிட்டன் டிராவல்ஸ் நிறுவனம் தாமஸ் குக் திவால்: 21,000 பேர் வேலை இழப்பு; 1,50,000 பயணிகள் வீடு திரும்புவதில் சிக்கல்

லண்டன்,

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பிரிட்டிஷ் நிறுவனமான தாமஸ் குக் இன்று அதிகாலை திவால் ஆன நிலையில் 21 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்; மேலும் இந்நிறுவனம் மூலம் வெளிநாடுகள் சென்ற சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் சுற்றுலா பயண நிறுவனமான தாமஸ் குக் தங்கள் நீண்டகால கடன் தொல்லைகளை சமாளிக்க சில இடங்களில் அவசரகால நிதியை எதிர்பார்த்து அவற்றை பெறத் தவறியதால் இன்று அதிகாலை சரிந்து விழுந்தது, இதனால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

உலகச் சுற்றுலாப் பயணிகளின் முன்னோடி அறிஞரான தாமஸ் குக் மூலம் 1881ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். 1896ல் முதன்முதலாக ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயணிகள் ஏஜென்ட்டாக அதிகாரபூர்வ நியமனம் பெற்றது. தாமஸ் குக் முதன்முதலாக 1927ல்தான் தனது விமானப் பயணத்தை தொடங்கியது. சிகாகோவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிக்கு நியூயார்க்கிலிருந்து 6 பேரை அழைத்துச் சென்று ஹோட்டலில் தங்கவைத்து பத்திரமாக திரும்ப அழைத்து வந்தது.

இதனை அடுத்து பயண ஏற்பாட்டில் மிக முக்கியமான ஒரு இடத்தை இந்நிறுவனம் பிடித்தது. அதனைத் தொடர்ந்து நேற்றுவரை இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய சுற்றுலாப் பயண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகள் கடனைப் பெற்று மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது. ஆனால் தற்போது உடனடியாக கடனை திருப்பிக்கட்ட வங்கிகள் வற்புறுத்தியதை அடுத்து ஏராளமான கடன் பிரச்சினையால் தத்தளித்து வந்தது.

கடனை அடைக்க பல்வேறு இடங்களில் நிதித் திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் போதிய அளவுக்கு நிதி சேராத நிலையில் கடன்காரர்களுக்கு பதில்சொல்லமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் இன்று திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தாமஸ் குக் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கும் சென்றுள்ள 1,50,000 பயணிகள் வீடு திரும்புவது தற்போது சிக்கலாகியுள்ளது. அது மட்டுமின்றி அதன் ஏராளமான நிர்வாக அலுவலகங்களும் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் 600 பயண ஏற்பாட்டு அலுவலகங்களைக்கொண்ட இந்த சுற்றுலா நிறுவனத்தில் மொத்தம் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். இவர்களின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பீட்டர் ஃபங்க்ஹவுசர் திங்கள்கிழமை காலை நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு வெளியே படித்த அறிக்கையில், பணிநிறுத்தம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

"பல மாதங்களாக பெரும் முயற்சிகள் மற்றும் சமீபத்திய நாட்களில் மேலும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், எங்கள் வணிகத்தை காப்பாற்ற ஒரு ஒப்பந்தத்தை எங்களால் பெற முடியவில்லை. இந்த விளைவு பலருக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதையும், கவலை, மன அழுத்தம் மற்றும் இடையூறு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x