சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலை விடுவித்த ஈரான்

சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலை விடுவித்த ஈரான்
Updated on
1 min read

ஈரானால் சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் ஸ்டெனா இம்பெரோ விடுவிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

'ஸ்டெனா இம்பெரோ' என்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜூலை மாதம் சிறை பிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களை விடுவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி அவர்களை விடுவிப்பதாகவும் ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தது.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் ஊடகங்கள், “சட்டவிதிகளை மீறியதால் 2 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட ஸ்டெனா இம்பெரோ கப்பல் ஞாயிற்றுக்கிழமை விடுக்கப்பட்டது. அக்கப்பல் இன்னும் சில தினங்களில் சர்வதேச கடற்பகுதியை வந்தடையும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.இதனை ஈரான் கடற்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 19-ம் தேதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ' என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறை பிடித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in