Published : 23 Sep 2019 01:08 PM
Last Updated : 23 Sep 2019 01:08 PM

எபோலா தாக்குதலில் காங்கோவில் 2,100 பேர் உயிரிழப்பு; உலக சுகாதார நிறுவனம் மீது மருத்துவ உதவிக்குழு குற்றச்சாட்டு 

தினந்தோறும் காங்கோவில் எபோலா தடுப்பூசி போடப்படுகிறது.

கின்ஷாஸா

கொடிய வைரஸ் தாக்குதலில் 2,100 பேர் உயிரிழந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) எபோலோ தடுப்பூசியை மிகவும் குறைவாக வழங்கி வருவதாக அரசு சாரா மருத்துவ உதவிக்குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 2,100 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கோவில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டிய நிலையில் இதற்கான தடுப்பூசியை வழங்குவதில் ஐநாவின் மருத்துவ உதவி அமைப்பான உலக சுகாதார அமைப்பு சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கோவில் மக்களிடம் பணியாற்றி வரும் பிரதான மருத்துவத் தொண்டு அமைப்பான 'டாக்டர்ஸ் வித்தவுட் பார்டஸ்' இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

'டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்', (Médecins Sans Frontières (MSF) International) அமைப்பு பிரான்ஸ் நாட்டை அடித்தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச மனிதாபிமான மருத்துவ அரசு சாரா அமைப்பாகும். இது பிரச்சினைக்குரிய போர்ப் பகுதிகள் மற்றும் உள்ளூர் நோய்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சேவை செய்வதில் மிகவும் பிரபலமானது.

எம்எஸ்எப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"தற்போதுள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று, உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் எபோலோ தடுப்பூசி ரேஷன் அளவு முறையில் மிகவும் குறைவாக வழங்கி வருகிறது. இதனால் அதிகம் ஆபத்தில் உள்ள மக்களில் மிகக் குறைவான நபர்களே பாதுகாக்கப்படுவார்கள்.

மருந்துகளின் இருப்பு மற்றும் அதன் புள்ளிவிவரப் பகிர்வு குறித்த நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதற்கு தன்னாட்சிமிக்க ஒரு சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டும்.

ஆகஸ்ட் 8, 2018 முதல் ஜெர்மன் மருந்து நிறுவனமான மெர்க் தயாரித்த எபோலா தடுப்பூசியை சுமார் 2,25,000 பேர் பெற்றுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை பெரும்பாலும் போதுமானதாக இல்லை.

ஒவ்வொரு நாளும் 2,000-5,000 பேர் வரை தடுப்பூசி போடலாம். ஆனால் மருந்துகள் பற்றாக்குறையினால் 50லிருந்து 1000 பேர் வரைதான் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

காங்கோ மக்களிடம் பணியாற்றிவரும் எங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ) தேவையில்லாத நெருக்கடிகளைத் தந்து வருகிறது. டபிள்யூஎச்ஓவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகத்தான் டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு காங்கோ சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தடுப்பூசி போடப்படும் பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

தற்போது போடப்படும் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பும் விரைவான செயல்திறனும் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

"ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2,45,000 அளவுகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 190,000 டோஸ்களை அனுப்ப அவர்கள் தயாராக உள்ளது. அடுத்த ஆறு முதல் 18 மாதங்களில் 6,50,000 கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெர்மன் மருத்துவ நிறுவமான மெர்க் அறிவித்துள்ளது.

இவ்வாறு டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர் அமைப்பு (எம்எஸ்எப்) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டபிள்யூஎச்ஓ மறுப்பு

மருந்துப் பொருள்கள் கிடைப்பதை மட்டுப்படுத்தி வருவதான குற்றச்சாட்டை டபிள்யூஎச்ஓ மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முடிந்த அனைத்தையும் செய்துவருவதாக ஐநாவின் டபிள்யூஎச்ஓ தெரிவித்துள்ளது.

அதேவேளை ''தடுப்பூசி பற்றாக்குறை மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படுவதற்கு காரணமாக இருக்க முடியாது'' என்று மருத்துவத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

-ஏஎஃப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x