Published : 23 Sep 2019 11:40 AM
Last Updated : 23 Sep 2019 11:40 AM

அமெரிக்காவின் மிகச்சிறந்த நண்பர் மோடி: எல்லைப் பாதுகாப்பில் சமரசம் கூடாது: ட்ரம்ப்

ஹூஸ்டன்

அமெரிக்காவின் மிகச்சிறந்த, ஆத்மார்த்தமான, நேர்மையான நண்பர் பிரதமர் மோடிதான். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்காக சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார் என்று பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டினார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்து. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப்பும் ஒரே மேடையில் பங்கேற்றார்.

அதிபர் ட்ரம்ப் 2020-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் ஆதரவு கோரினார். இந்தியாவின் மிகச்சிறந்த நட்பு நாடாக அமெரிக்கா இருந்துவருகிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

அதன்பின் அதிபர் ட்ரம்ப் பேசியதாவது:

''அமெரிக்காவின் மிகச்சிறந்த, ஆத்மார்த்தமான, நேர்மையான நண்பர் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்காக அவரும், அவரின் அரசும் ஏராளமான நல்ல பணிகளைச் செய்து வருகிறது.

பிரதமர் மோடியும், நானும் ஹூஸ்டன் நகருக்கு இந்தியா -அமெரிக்கா இடையிலான நட்புறவையும், நம்முடைய கனவுகளையும், பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டாட வந்திருக்கிறோம். அமெரிக்காவில் வசிக்கும் 40 லட்சம் இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஏராளமான பங்களிப்பை அளிக்கிறார்கள். கலாச்சாரத்தையும், உயர்ந்த மதிப்புகளையும், சமூகத்தை உயர்த்துவதற்கான பணிகளையும் செய்து, அமெரிக்காவை பெருமைப்படுத்துகிறார்கள். நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பதைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.

நான் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், இந்தியா எங்களுக்கு உண்மையான, மிகப்பெரிய நட்புநாடாக இருக்கும். அமெரிக்க அதிபரான என்னைக் காட்டிலும் உங்களுக்கு மிகச்சிறந்த நண்பராக எப்போதும் யாரும் இருக்க முடியாது. நான் சொல்வதின் உண்மை பிரதமர் மோடிக்குத் தெரியும்.

இரு நாடுகளுக்கு இடையிலான அடிப்படையான மதிப்புமிக்க விஷயங்கள், ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பது ஆகியவை இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை வலுப்படுத்துகிறது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலிமையாகவும், வெற்றிக்கான பாதையில், நேர்த்தியான திசையில் செல்வதை இந்த உலகம் காண்கிறது.

இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பிரதமர் மோடி சிறந்த பணிகளைச் செய்து வருகிறார். பிரதமர் மோடியுடன் இன்று நான் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.

இந்தியாவும், அமெரிக்காவும் தங்களின் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நம்புகிறது. அதற்காகத்தான் எல்லைப் பாதுகாப்பில் இரு நாடுகளும் அதிக அக்கறை கொள்கின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளை எல்லையில் ஏற்படுத்துகின்றன.

நமது எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் எல்லைப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதை நாங்களும் புரிந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவுடனான நட்புறவை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். இரு நாடுகளின் ஜனநாயகத்தில் மக்களுக்கு அதிகபட்ச சுதந்திரம் அளித்திருப்பதை உணர்த்தி வருகிறோம். இருவரும் சேர்ந்து இரு நாடுகளின் நட்புறவை ஆழமாகக் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் நாட்டை வலிமையானதாக்கும், மக்களை வளமுள்ளவர்களாக, அவர்களின் கனவுகளை நிறைவேற்றி, எதிர்காலத்தை பிரகாசமாக்கத் துணை புரியும்''.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x