

ஹூஸ்டன்
அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் அரசு வர ஆதரவு தர வேண்டும் என்று ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக ஹூஸ்டன் நகரில் நேற்று அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்தது.
ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி அரங்கில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் தோன்றி மக்களுக்கு உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில், ''2020-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்பையே மீண்டும் மக்கள் அதிபராகத் தேர்வு செய்ய வேண்டும்'' என்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பிரதமர் மோடி, இந்தியில் " ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்" (இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று முழுக்கமிட்டு மக்களிடம் ஆதரவு கோரினார்.
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், " அதிபர் ட்ரம்ப்புடன் இந்தியா நெருக்கமான உறவு கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. அடுத்த முறை நடக்கும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அரசுதான் வர வேண்டும்" எனத் தெரிவித்தார்
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, குடியரசுக் கட்சியின் இந்துக்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது, அவர் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும்போது ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கார் என்ற முழக்கத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு அமெரிக்க இந்தியர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், "எனக்காக ஒரு உதவி செய்வீர்களா? சின்ன வேண்டுகோள் விடுக்கிறேன். உலகில் உள்ள அனைத்து இந்தியர்களிடம் இந்த வேண்டுகோள் வைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அல்லாத 5 குடும்பத்தினரை இந்தியாவுக்கு சுற்றுலா அனுப்பி வையுங்கள். இந்த முடிவை ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் எடுத்து இந்தியாவின் சுற்றுலாவுக்காக உதவ வேண்டும்" எனக் கோரிக்ககை விடுத்தார்.
மேலும், ஹூஸ்டன் நகரில் காந்தி அருங்காட்சியகம், குஜராத்தி சமாஜம் கட்டிடம் மற்றும் சித்தி விநாயகர் கோயில் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிடிஐ