Published : 23 Sep 2019 10:08 AM
Last Updated : 23 Sep 2019 10:08 AM

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து சொந்த நாட்டை நிர்வகிக்கத் தெரியாதவர்களை நிம்மதியிழக்கச் செய்துள்ளது: பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

ஹாஸ்டன்

ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்தது, தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும், சொந்த நாட்டை நிர்வகிக்கத் தெரியாவதர்களுக்கு பெரிய தொந்தரவையும், நிம்மதியழப்பையும் அளித்துள்ளது என்று ஹூஸ்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாகிஸ்தானை கடுமையாக சாடிப் பேசினார்.

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அதில் முதல்கட்டமாக,
டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்புடன் சேர்ந்து பங்கேற்றார்.

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்களின் ஒருபகுதி

ஹூஸ்டன் என்ஆர்ஜி மைதானத்தில் நேற்று நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய-அமெரிக்கர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்தியா, அமெரிக்கா மட்டுமன்றி, உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.

தேசிய கீதத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், இந்திய-அமெரிக்க கலைஞர்கள் சுமார் 400 பேர் இசை மற்றும் நடனம் நிகழ்த்தினர். பின்னர், பிரதமர் மோடி மேடையேறியபோது, அரங்கில் இருந்த மக்கள் மோடி என்ற கோஷத்தால் மைதானமே அதிர்ந்தது. பின்னர், அதிபர் டிரம்ப்பின் கையைப் பிடித்து, பிரதமர் மோடி மேடைக்கு அழைத்து வந்தார்.

அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:

''மிகவும் சிறப்பு வாய்ந்த மனிதர் (அதிபர் ட்ரம்ப்) இங்கு நம்முடன் இருக்கிறார். அமெரிக்காவின் உண்மையான நண்பனாக இந்தியா இருந்து வருகிறது. சிஇஓ முதல் ராணுவம் வரை, வெள்ளை மாளிகை முதல் ஸ்டுடியோ வரை, அரசியல் முதல் பொருளாதாரம் வரை அதிபர் ட்ரம்ப் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற இந்தியர்கள்.

நான் அதிபர் ட்ரம்ப்பை சில முறை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மிகுந்த நட்புடனும், உற்சாகத்துடனும், எளிதாகப் பழகும் வகையில் இருக்கிறார். இந்தியா, எப்போதும் அதிபர் ட்ரம்ப்புடன் மிகுந்த நட்புறவில் இருக்கிறது. இந்தமுறையும் ட்ரம்ப் அரசுதான் அமெரிக்காவில் வர வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு அங்கு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்து வந்தது. எந்தவிதமான மேம்பாட்டையும், வளர்ச்சியையும் இந்தப் பிரிவு அங்கு அனுமதி்க்கவில்லை. பெண்களுக்கும், எஸ்சி,எஸ்டி மக்களுக்கும் எதிரான பாகுபாட்டையும் வளர்த்தது.

சொந்த நாட்டை நிர்வாகம் செய்யத் தெரியாவர்கள், தீவிரவாத்ததை வளர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமே இதை அறியும். நியூயார்க் இரட்டைக் கோபுரம் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளும், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் எங்கிருந்து வந்தார்கள், எந்த நாட்டில் இருந்து வந்தார்கள் என்பது தெரியும்.

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து, வளர்ப்பவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் இந்தியாவின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் முழுமையாக ஆதரவு அளிக்கிறார். இங்குள்ள மக்கள் அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

அதிபர் ட்ரம்ப்புடன் கைகோர்த்து பிரதமர் மோடி அரங்கை வலம்வந்த காட்சி : படம் ஏஎன்ஐ

என்னுடைய அரசு இந்தியாவில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நோக்கம் உயர்வாக இருக்க வேண்டும், வளர்ச்சி உயர்வாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் சிந்திக்கிறோம்.
இந்தியாவில் சுகாதாரத்துக்காக ஸ்வச் பாரத் இயக்கத்தையும், ஊழலை ஒழிக்கவும் ஏராளமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த அரங்கில் இருக்கும் மக்கள் கூட்டமே, இந்தியா -அமெரிக்கா இடையே இருக்கும் நட்புறவுக்கு அடையாளம்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இந்தியாவில் 61 கோடி மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் இரு மடங்காகும். இந்தியர்கள் என்றாலே பொறுமையானர்கள் என்று சொல்லப்படுவார்கள்.

மேடையில் அதிபர் ட்ரம்புடன் கைகோர்த்து நின்ற பிரதமர் மோடி

ஆனால், இப்போது 21-வது நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்காக இப்போது அவர்கள் பொறுமையற்று கடுமையாக உழைக்கிறார்கள். மக்கள் புதிய இந்தியாவை நோக்கிச் செல்கிறார்கள். புதிய இந்தியா எனும் கனவை நிறைவேற்ற நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். இதற்காக நாங்கள் எங்களுக்குள் போட்டியிடுகிறோம்.

சமீபத்தில் என்னுடைய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு செய்து, பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தது. இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும்.

அதிபர் ட்ரம்ப் மிகச்சிறந்த மனிதர். எந்த விஷயத்தையும் பேசி முடிப்பதில் வல்லவர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதிபர் ட்ரம்ப்பும், அவரின் குடும்பத்தாரும் இந்தியாவுக்கு வர வேண்டும்’’.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x