

டோக்கியோ
தேவையற்ற நினைவுகளே நம் தூக்கத்திற்குத் தடையாக உள்ளதென்றும் அதற்கு தேவையான மூளையின் ஹைபோதாலமஸில் உள்ள நியூரான்களின் குழுவே மறதி என்ற மாமருந்தை வழங்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதாகவும் ஜப்பான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இக்கால மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். குழப்பமான மனநிலையோடு இரவில் உறங்கச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான எளிய தீர்வை அறிவியல் பூர்வமாக சற்றே கோடிட்டுக் காட்டுகிறது இன்று வெளியாகியுள்ள ஜப்பான் ஆய்வு ஒன்று.
இதுகுறித்து ஜர்னல் சயின்ஸ் வெளியிட்டுள்ள, நாகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷுண்டாரோ இசாவா உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுத் தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது:
''நாம் ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் அன்று நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறோம். உண்மையில் இது தேவையற்றது. அவற்றை ஒதுக்கவோ அல்லது செயல்படுத்தவோ முயலும்போதுதான் மூளை மும்முரமாகச் செயல்படுகிறது.
ஆனால், நல்ல வேளையாக நமது மூளையிலுள்ள சில நியூரான்களின் குழு நமது அனுபவங்கள் அனைத்தும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக மறதி என்ற செயல்பாடு, சிந்தனைகளிடையே குறுக்கிட்டு தூக்கத்திற்கான முக்கிய அம்சத்தை செயல்படுத்தத் தொடங்குகிறது.
தூக்கத்தின் போது நினைவுகளை ஒழுங்குபடுத்துவதற்குப் பின்பு சரியாகப் புரிந்து கொள்ளப்படாத நினைவுகளும் உருவாகின்றன. அவை கனவுகளாக மாறுகின்றன.
தேவையற்றவற்றை நம்மை அறியாமல் மறப்பதற்கு தூக்கம்தான் வழி. அதிக சுமையாக உள்ள நினைவுகளை அகற்ற அனுமதிப்பதில் உள்ள 'மறதி' ஒரு முக்கிய செயல்முறையாகும். இது நாம் தூங்கும் போது மட்டுமே நிகழ்கிறது.
விலங்குகளிடம் இத்தகைய நியூரான்களைத் தடுப்பதன் மூலம் அவற்றின் நினைவுகளின் செயல்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எம்.சி.எச் நியூரான்களை அதன் போக்குக்கு விட்டாலும் விலங்குகளின் நினைவுகளும் மெல்ல மெல்ல செயலிழந்து விடுகின்றன.
மனிதர்களைப் பொறுததவரை ஆழ்ந்த தூக்கத்தை நோக்கிச் செல்வதற்கு ஏற்ப, மூளையின் நரம்பியல் பாதையான ஹைபோதாலமஸில் உள்ள நியூரான்களின் குழு ஒன்று மறதி என்கிற அம்சத்தைத் தூண்டி நம் உறக்கத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது மன அமைதியோடு படுக்கைக்குச் சென்றால் நியூரான்களின் குழுவுக்கு பெரிய வேலை வைக்காமல் இயல்பாக உறங்க முடியும் என்பதுதான்''.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.