Published : 22 Sep 2019 11:19 AM
Last Updated : 22 Sep 2019 11:19 AM

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், தாவுதி போரா முஸ்லிம்கள் சந்திப்பு: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவு

ஹூஸ்டன்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடியை காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், தாவுதி போரா முஸ்லிம்கள் சந்தித்துப் பேசினர்.அப்போது காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

அமெரிக்காவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். ஹூஸ்டன் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் ஹூஸ்டன் நகரில் 16 முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, இந்தியாவில் முதலீடு செய்யக் கோரி அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பின் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனத்துடன், அமெரிக்காவின் டெலூரியன் எல்என்ஜி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அமெரிக்க இந்தியர்கள் இன்று ஹூஸ்டன் நகரில் இன்று நடத்தும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்புடன் ஒரே மேடையில் பேசுகிறார்.

ஹூஸ்டன் நகரில் என்ஆர்ஜி கால்பந்து அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள், 60-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து பிரதமர் மோடி பேசிய காட்சி : படம்ஏஎன்ஐ

அமெரிக்க இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் முதல் முறையாகப் பங்கேற்கிறார்.

ஹூஸ்டன் நிகழ்ச்சி முடிந்தபின் அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் வரும் 27-ம் தேதி பேச உள்ளார்.

ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 370-வது பிரிவை திரும்பப் பெற்று இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் இந்த முடிவுக்கு சீக்கியர்கள், தாவுதி போரா முஸ்லிம்கள், காஷ்மீர் பண்டிட்டன் முழுமனதுடன் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சமூகத்தினருடன் பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறுகையில், " ஹூஸ்டன் நகரில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்கள். ஒவ்வொரு இந்தியருக்குமான அதிகாரத்துக்கும், வளர்ச்சிக்கும் நடவடிக்கை எடுத்துவரும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டது

பிரதமர் மோடி சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள், தூவுதி போரா முஸ்லிம்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, தாவுதி முஸ்லிம்கள் பாரம்பரியமான அங்கவஸ்திரத்தை பிரதமர் மோடிக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், " தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள், பிரதமர் மோடியை ஹூஸ்டன் நகரில் சந்தித்தனர். இந்தூரில் கடந்த ஆண்டு் சயிதான ஷாகிப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றபோது அதில் தாங்களும் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்தனர். பிரதமர் மோடிக்கு இந்தியப் பாரம்பரியம் நிரம்பரிய பட்டு அங்கவஸ்திரத்தை அளித்துக் கவுரவித்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

சீக்கிய சமூகத்தினர் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறுகையில், "ஹூஸ்டனில் உள்ள சீக்கிய சமூகத்தினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சீக்கிய சமூகத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார். காஷ்மீரில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவை எடுத்தமைக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x