

ஹூஸ்டன்
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 7 நாட்கள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன், ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
எரிசக்தி மையமாக விளங்கும் ஹூஸ்டன் நகருக்கு வந்து இறங்கியவுடன் முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேசி இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் பிரமதர் மோடி 7 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். ஹூஸ்டன் நகரிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அமெரிக்க வர்த்தகத்துறை மற்றும் சர்வதேச விவகாரத்துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ஒல்சன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
ஹூஸ்டன் நகரம் வந்த பிரதமர ்மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்பட்ட காட்சி
எரிசக்தி மையாகத் திகழும் ஹூஸ்டன் நகரில் முதல்கட்டமாக அமெரிக்காவின் முக்கியமான 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்டமேஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார், இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி திட்டங்களை ஊக்கப்படுத்த அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பேக்கர் ஹக்ஸ், பிபி, சினிரி எனர்ஜி, டோமினன் எனர்ஜி, எமர்ஸன் எலக்ட்ரிக் கம்பெனி, எக்ஸன்மொபைல், பெரோட் குரூப் அன்ட் ஹில்வுட், ஐஹெச்எஸ் மார்கிட், லியான்டெல்பேஸல் இன்டஸ்ட்ரீஸ், மெக்டெர்மார்ட், ஸ்குலும்பர், டெலுரியன், டோட்டல், ஏர்புரோடக்ட்ஸ், வின்மர் இன்டர்நேஷனல் அன்ட் வெஸ்ட்லேக் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறுகையில், " இந்தியா-அமெரிக்கா நட்புறவுக்கு ஊட்டமளிக்கும் வகையில், முதல் கட்டமாக பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். எரிசக்தி துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுறவுடன் செயல்பட இந்தக் கூட்டம் துணை புரியும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய காட்சி : படம்ஏஎன்ஐ
இந்தக் கூட்டத்தின் எதிரொலியாக இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனமும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு நிறுவனமான டெலுரியனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 50 லட்சம் டன் அளவுக்கு எல்என்ஜி வாயுக்கான முதலீடுகளை அளிப்பது குறித்து இந்த ஒப்பந்தத்தில் முடிவானது.
பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம ்செய்து கொண்ட பெட்ரோநெட் நிறுவனம், டெலூரியன் நிறுவனம்
டெலுரியன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், " இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனத்துடன் பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தியாவின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியாளர் பெட்ரோநெட் நிறுவனம். இந்நிறுவனம் திரவ இயற்கை எரிவாயுவைக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால், எதிர்காலத்தில் வர்த்தகம் அதிகமாகி பிரதமர் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட உதவி செய்வோம். பிரதமர் மோடியின் முன் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது எங்களுக்குப் பெருமையானது" எனத் தெரிவிக்கப்பட்டது.
பிடிஐ