Last Updated : 02 Jul, 2015 10:25 AM

 

Published : 02 Jul 2015 10:25 AM
Last Updated : 02 Jul 2015 10:25 AM

மக்களை மதிக்காத மியான்மர்- 7

துரதிருஷ்டமான நான்கு எட்டு (8.8.88) குறித்துக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.

1962-ல் துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்றினார் நெ வின். அப்போது ஆசியாவின் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக விளங்கியது பர்மா. தேக்கு என்றால் பர்மா தேக்குதான். அரிசி விளைச்சலோ அமோகம்.

ஆனால் ராணுவ ஆட்சியில் ஊழல் மலிந்தது. அரசின் கொள்கைகள் நீர்த்துப் போயின. உலகின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றாக பர்மா மாறியது. தவிர மக்களின் குரலை நசுக்குவதிலேயே முழு முனைப்பு காட்டியது ராணுவ ஆட்சி.

அடக்கப்படும் எதுவும் ஒரு நாள் பீறிட்டெழுவது இயல்புதானே!

1985 நவம்பரின் போதே மாணவர்கள் அணி திரண்டனர். ‘உள்ளூர் கரன்சி நோட்டுகள் இனி செல்லாது’ என்று அரசு கூறியதற்கு பலமான எதிர்ப்பு தெரிவித்தனர்.

1987 செப்டம்பர் 5 அன்று நெ வின் வேறொரு அறிவிப்பை வெளியிட்டார். ‘’இனி 100, 75, 35, 28 மதிப்பு கொண்ட கியாத் கரன்சி நோட்டுகள் செல்லுபடியாகாது. எனவே உங்களிடம் இருக்கும் அத்தகைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளுங்கள்’’ என்றார்.

45 மற்றும் 90 கியாத் நோட்டுகள் மட்டும் இதிலிருந்து தப்பி விட்டன. இதற்குக் காரணம் இந்த இரண்டு எண்களும் 9 என்ற எண்ணால் முழுமையாக வகுபடக் கூடியவை என்பதுதான். நெ வின் தனது அதிஷ்ட எண் 9 என்று கருதியவர்.

தவிர கல்விக் கட்டணமும் உயர்த்தப்பட்டது. காரணம் கல்வி என்பதையே அரசு அவசியமில்லை என்று கருதியதுதான்.

ரங்கூன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற அமைப்பின் மாணவர்கள் இவற்றிற்கு எதிராக கடும் கலவரங்களில் ஈடுபட்டனர். ரங்கூன் நகரம் முழுவதுமே பற்றி எரிந்தது. ரங்கூனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

பர்மாவின் பிற பகுதிகளில் உழைப்பாளர்களும், துறவிகளும்கூட அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சில அரசுக் கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

ஒருவழியாக 1987 அக்டோபரில் கல்விக் கூடங்கள் திறந்தன. ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை மீண்டும் பலரது எதிர்ப்பைத் தூண்டியது. ‘’அரசுக்கு நிதி தேவை. எனவே விவசாயிகள் தங்கள் விளைச்சலை சந்தை விலையைவிட கணிசமாகக் குறைந்த விலையில் அரசுக்கு விற்க வேண்டும்’ என்ற அறிவிப்பு கிராம மக்களை முழுமையாக அரசுக்கு எதிராகத் திருப்பியது.

ஆனால் 1988 கலவரங்களுக்கான விதை தொடர்பில்லாத ஒரு விஷயத்தில் தொடங்கியதுதான்.

1988 மார்ச் 12 அன்று ரங்கூன் மாணவர்கள் சிலர், கல்லூரி மாணவர்கள் அல்லாத சிலருடன் டீக்கடை ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். கடையில் எந்த கேசட்டைப் போட வேண்டும் என்பதில் தகராறு தொடங்கியது. கைகலப்பில் முடிந்தது. ஒரு மாணவன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான். காவல்துறைக்கு எதிராக மாணவர்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். 500க்கும் அதிகமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். மீண்டும் கலவரங்கள். ஃபோன்மா என்ற மாணவன் குண்டடிபட்டு இறந்தான். எதிர்ப்பு தொடர்ந்தது. பின்னர் நேரடித் தொடர்பில்லாத மாணவர்கள்கூட இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

காவல்துறையின் மிருகத்தனமான அடக்குமுறை, அரசு இயந்திரத்தில் நிலவிய ஊழல், நாட்டின் பொருளாதாரத்தை அரசு சீர்குலைத்தது போன்ற காரணங்கள் மாணவர்களுக்குக் கடும் கோபத்தை அளித்தன. அவ்வப்போது பர்மாவில் ஆங்காங்கே மாணவர் போராட்டங்கள் வெடித்தன. பல மாணவர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினரால் பல மாணவிகளும் கற்பழிக்கப்பட்டனர்,

நாட்டில் பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி வேண்டுமென்ற கோரிக்கை உரத்து ஒலிக்கத்தொடங்கியது.

இவற்றின் தொடர்ச்சியாக நெ வின் 1988 ஜூலை 23 அன்று ராஜினாமா செய்தார். பலகட்சிகள் கொண்ட மக்களாட்சியை அளிக்கிறேன் என்று ஒப்புக்குச் சொன்னார். ஆனால் அவர் புதிய அரசுக்குத் தலைமை தாங்க அழைத்தது ஸெயின் லுவின் என்பவரை. இவர் ‘ரங்கூனின் கசாப்புக் கடைக்காரர்’ என்று பெயர் வாங்கியவர்.

1988 ஆகஸ்ட்டில் எதிர்ப்புகள் உச்சத்தை அடைந்தன. மாணவர்கள் அனைவருமே தேசிய அளவில் ஒன்றுபட்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பைத் தெரிவிக்க 8-8-88 என்ற தேதியைத் தேர்ந்தெடுத்தனர்.

ரங்கூன் தெருக்களில் புதிது புதிதாக போஸ்டர்கள் தோன்றின. அவற் றிலெல்லாம் மயிலின் உருவம் காணப்பட்டது. அகில பர்மா மாணவர் கூட்டமைப்பின் குறியீடுதான் மயில்.

அதிசயமாக சில நாளிதழ்களும்கூட எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்தன. (அவை அப்படிச் செய்யாது என்று நம்பி அரசு அவற்றை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை).

மாணவர்கள் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி ரங்கூன் மற்றும் மண்டலே ஆகிய பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்களையும், துறவிகளையும் கேட்டுக் கொள்ள, அவர்களின் ஆதரவு கிட்டியது. கொஞ்சம் எதிர்பாராத வகையில் அரசு ஊழியர்கள்கூட மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். பல்வேறு தளங்களில் இருந்த மக்களும் தங்கள் ஆதரவை அளிக்கத் தொடங்கினார்கள். பர்மா

முழுவதுமே தீப்பற்றி எரிந்ததுபோல அரசுக்கு எதிரான உணர்வில் கனன்று கொண்டிருந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x