

எஸ். முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பிறகு அந்நாட்டில் பெண்கள் பர்தா அணிந்துவர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப். 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் கடந்த ஏப்ரல் 24 முதல் அவசரகாலச் சட்டமும், ஏப்ரல் 29 முதல் பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிந்து செல் வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று அவசரநிலை பிரகடனம் விலக்கப் பட்டாலும் பெண்கள் பர்தா அணிந்து பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததா என்பது குறித்து, அங்குள்ள முஸ்லிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழக எம்பிக்கள் கனிமொழி (தூத்துக்குடி), நவாஸ்கனி (ராமநாதபுரம்), எம்எல்ஏ அபுபக்கர் (கடையநல்லூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் பொருளாளர் யூசுப், முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை சந்தித்து, இலங்கை யிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் பிரச்சினை பற்றியும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரை யாடினர். அப்போது இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை காவல் துறைத் தலைவர் அஜித் ரோஹண, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகளுக்கு விதிக்கப் பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிக்கை வெளி யிட்டுள்ளார்.