Published : 21 Sep 2019 02:01 PM
Last Updated : 21 Sep 2019 02:01 PM

ஐ.நா.சபை பொதுக்குழு கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை இம்ரான் கான் எழுப்புவார்: பாக். வெளியுறவு அமைச்சகம் தகவல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : கோப்புப்படம்

இஸ்லாமாபாத்

ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தையும், மனித உரிமைகள் விவகாரத்தையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுப்புவார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி பேச உள்ளார். இவர் பேசிய பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு இன்று நியூயார்க் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370-வது பிரிவை இந்தியா திரும்பப் பெற்றதில் இருந்து பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சினையைக் கொண்டு செல்லும் பாகிஸ்தானின் கோரிக்கையை பல நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அதேசமயம், காஷ்மீர் விவகாரம் எங்களின் உள்நாட்டுப் பிரச்சினை என்று இந்தியா தெரிவித்ததால், மற்ற நாடுகள் இதில் கருத்து தெரிவிக்கத் தயங்குகின்றன.

ஆனால், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்புவோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது

இந்தச் சூழலில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டஅறிக்கையில், "ஐக்கிய நாடுகள் சபை பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் நோக்கம், நிலைமை, அங்கு நடக்கும் மனித உரிமைகள் பிரச்சினை, அதுதொடர்பான விஷயங்களில் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். ஒட்டுமொத்தமாக காஷ்மீரில் நடக்கும் விவகாரங்கள் குறித்து ஐ.நா.வில் தெரிவிப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வரும் 27-ம் தேதி ஐ.நா.வில் தான் பேசும்போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிப் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x