

தேனீக்கள் கூட்டமாக மொய்த்ததால் ரஷ்யாவில் நேற்று விமானம் ஒன்று தாமதமாகப் புறப்பட்டது.
மாஸ்கோவில் வுனூக்கோ விமான நிலையத்தில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு `ரொசியா ஏர்லைன்' விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது விமானத்தின் வால் பகுதியில் இருந்து ஏராளமான தேனீக்கள் பறக்கத்தொடங்கின. அவை விமானி அறையின் ஜன்னல்கள் மற்றும் பயணிகளின் ஜன்னல்களில் ஒட்டிக்கொண்டன.இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்கே அந்த தேனீக்கள் விமானத்துக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, உடனடியாக இரண்டு அவசர மருத்துவ ஊர்திகள் கொண்டு வரப்பட்டன.
பின்னர் விமான நிலைய பணியாளர்கள் அந்த தேனீக்களை விரட்டியடித்தனர். இதன் காரணமாக அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதன்பிறகு பயணிகள் நிம்மதியடைந்தனர்.
இவ்வாறு தேனீக்கள் விமானத்தைத் தொந்தரவு செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் இங்கிலாந்தில் இருந்து ஐயர்லாந்துக்குச் சென்ற விமானம் ஒன்று தேனீக்கள் பிரச்சினையால் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.