

பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து கடல் நீர் உயர்ந்து வரும் அபாயத்தை உலகத் தலைவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் என்ற சிறுமி பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இவரது தலைமையில், பருவநிலையைப் பாதுகாக்க பள்ளி வேலை நிறுத்தம் என்ற அமைப்பு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக இன்று பேரணியில் கலந்துகொண்டனர்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆசிய பசிபிக் போன்ற நாடுகள் பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதை எச்சரித்து 'கடல் மட்டம் உயர்ந்து வருகிறது', ‘ நமக்கு வேறு உலகம் இல்லை’ என எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணி சென்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் நாடுகளின் அரசும், உலகத் தலைவர்களும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உரிய நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உலக நாடுகளில் மொத்தம் 110 நகரங்களில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தப் பேரணியில் போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.