Published : 20 Sep 2019 01:52 PM
Last Updated : 20 Sep 2019 01:52 PM

காஷ்மீர் விவகாரத்தை பொதுக் குழுக் கூட்டத்தில் ஐநா. தலைவர் எழுப்பக்கூடும்: செய்தித்தொடர்பாளர் சூசகம்

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் : கோப்புப்படம்

நியூயார்க்

அடுத்தவாரத்தில் தொடங்கும் ஐக்கிய நாடுகள் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எழுப்பக்கூடும் என்று ஐ.நா. செய்தித்தொடர்பாளர் சூசகமாகத் தெரிவித்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி நீக்கியது, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து, சர்வதேச அளவில் விவகாரத்தை கொண்டு சென்றது.

ஆனால் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் இதில் தலையிடவில்லை. இதையடுத்து ஐ.நா.விடம் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எடுத்துச் சென்று முறையிட்டு, கடிதமும் அளித்துள்ளது. அடுத்த வாரம் தொடங்க உள்ள ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் எழுப்பப்படக்கூடும் எனத் தெரிகிறது.

அதற்கு ஏற்றார்போல், காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்றுமுன்தினம் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " இந்திய, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுநடத்துவது அவசியமானது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் உதவுவதற்கும், மனித உரிமைகளை நிலைநாட்டவும் ஐ.நா. தயாராக இருக்கிறது.

இருநாடுகளும் ஏற்றுக்கொண்டால் மட்டும் இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிடும். மனித உரிமைகள் அனைத்து இடங்களிலும் மதிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து" எனத் தெரிவித்தார்

ஆனால், ஐநா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரும் 27-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்தடுத்து பேச உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவாரா என்பது குறித்து அவரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபானிக் துஜாரிக் நிருபர்களிடம் கூறுகையில், " காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் தெளிவாகக் கூறியுள்ளார். காஷ்மீர் மனிதஉரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற விஷயத்திலும் அவர் உறுதியாக இருக்கிறார். ஏற்கனவே அவர் வலியுறுத்தியதுபோல், ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பொதுச்செயலாளர் குட்டரெஸ் பேசக்கூடும்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x