Published : 19 Sep 2019 06:02 PM
Last Updated : 19 Sep 2019 06:02 PM

பொதுவெளியில் பாலியல் அத்துமீறல்: இந்தோனேசியா பண்டா அசேயில் 3 ஜோடியினருக்குப் பிரம்படி

பண்டா அசே, இந்தோனேசியா, ஏ.எப்.பி.

இந்தோனேசியாவின் பண்டா அசேயின் இஸ்லாமியச் சட்டங்களின் படி பொதுவெளியில் ஆணும் பெண்ணும் காதல் செய்வது குற்றமாகும்,பாலியல் செயல்களில் ஈடுபடுவதும் கடும் குற்றமாகும். அந்த அடிப்படையில் 3 ஜோடி பிடிபட அவர்களுக்கு கடும் பிரம்படி பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இந்த 3 ஜோடியினரும் பொதுவெளியில் பாலியல் செயலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து பிரம்படி தண்டனை அளிக்கப்பட்டுள்ளது

சூதாட்டம், மதுபோதை, தன்பாலின ஈர்ப்பு, திருமணத்துக்கு முந்தைய பாலுறவு உள்ளிட்ட குற்றங்களுக்கு சுமத்ரா உள்ளிட்ட பகுதிகளில் கசையடி தண்டனை உண்டு.

உலகின் பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில் அசே பகுதியில் மட்டும்தான் ஷரியத் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வியாழனன்று முகத்தை மறைத்துக் கொண்டு வந்த ஷரியா அதிகாரி 3 ஆண் 3 பெண்கள் கொண்ட ஜோடிக்கு தலா 20 முதல் 22 பிரம்படித் தண்டனை அளித்தார், பொதுவெளியில் காதலித்ததற்கான தண்டனை அது என்று கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் தண்டனை அனைத்தும் மசூதியின் முன்பாக நிறைவேற்றப்பட்டது.

இதனை அங்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட பார்வையாளர்கள் பார்த்தனர் இதில் மலேசிய மாணவர்களும் அடங்குவர். முகது ரஷ்டி என்பவர் இதனை நேரில் பார்த்ததை விவரித்த போது, “நான் பதற்றமடைந்தேன், இப்போதுதான் இது போன்ற ஒன்றை பார்க்கிறேன்” என்றார்.

ஆனால் அவர் மேலும் கூறிய போது, “பிற நாட்டிலிருந்து வரும் எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமும் கூட, உள்நாட்டு சட்டத்திட்டங்களை பயணிகள் மதிக்க வேண்டும்” என்றார்.

பண்டா அசே ஏயர் அமினுல்லா உஸ்மான் இந்தத் தண்டனைகள் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தனது நீண்ட நாளைய நிலைப்பாட்டை உறுதி செய்தார்.

ஆனால், “பண்டா அசேவுக்கு வருவதை நிறுத்தி விடாதீர்கள், சட்டத்தை மதித்து நீங்கள் நடக்கும் வரை உங்களுக்கு இத்தகைய தண்டனைகள் நிகழாது” என்றார்.

ஆனால் உரிமைகள் குழுவினர் பொதுவெளியில் பிரம்படி கொடுப்பது கொடூரமான சித்ரவதை என்று கண்டித்துள்ளனர், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடூடுவும் இந்த முறை ஒழிய வேண்டும் என்கிறார், ஆனால் உள்ளூர் மக்களிடம் இதற்கு வரவேற்பு உள்ளது.

இந்தப் பகுதியின் 50 லட்சம் மக்கள் தொகையில் 98% மக்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x