

எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக சவுதி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஏமனில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இந்தத் தாக்குதல் துல்லியமாக எங்கிருந்து நடத்தப்பட்டுள்ளது என்பது குறித்து சவுதி விசாரணை நடத்தி வருகின்றது. ஆலைகள் மீது சுமார் 18 ஆளில்லா விமானங்கள், 7 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் வடக்குப் பகுதியிலிருந்து நடந்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான்தான் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது” என்றார்.
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலின் பின்னணியில் ஈரான்தான் இருக்கிறது என்று அமெரிக்க - சவுதி விசாரணைக் குழுக்கள் முன்னரே தெரிவித்திருந்தன.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.