

லண்டன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த வழக்கில், சர்வதேச போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றிருந்த நிலையில், அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று அவர் மீது இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் 19-ம் தேதி நீரவ் மோடியை ஸ்கட்லாந்து யார்ட் போலீஸார் கைது செய்தனர்.
அவர் லண்டன் வாண்ட்ஸ்வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் (செப்.19) முடிவடைவதால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் அவரது காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்தது. பொருளாதார குற்றங்களுக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் இந்தியா திரும்பாத நீரவ் மோடியை நாடு கடுத்துமாறு இங்கிலாந்து அரசிடம் இந்தியா கோரிவருகிறது.
-ஏஎன்ஐ