

ஜெருசலேம்
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க லிக்குட் கட்சியின் தலைவர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு வருகிறார்.
கடந்த 6 மாதங்களில் நடக்கும் 2-வது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். மூன்றாவது முறையாக தேர்தல் நடத்தக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியை எடுப்பதாக பிரதமர் நெதன்யாகு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி, எதிர்க்கட்சியும் இடதுசாரியான பென்னி காட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொயிட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இஸ்ரேலில் இன்னும் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி 32 இடங்களுடன் பின்தங்கி இருக்கிறது.
எதிர்க்கட்சியான பென்னி காட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி 33 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் சவாலான போட்டி இருந்து வருகிறது.
மூன்றாவது இடத்தில் அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட் கட்சி 12 இடங்களுடன் இருக்கிறது. பழைமைவாத கட்சியான ஷாஸ்க்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன.
ஆட்சி அமைப்பதற்கு 61 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு 55 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இதனால், வேறுவழியி்ன்றி பிரதான எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான பென்னி கான்ட்ஸுக்கு பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நெதன்யாகுவின் திடீர் அழைப்புக்கு எந்தவிதமான பதிலும் அளிக்கமுடியாமல், ப்ளூ அண்ட் வொய்ட் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்ஸ் உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நெதன்யாகு நிருபர்களிடம் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் வலதுசாரி அரசு அமைக்க வேண்டும் என்று பேசினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. வலதுசாரியால் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது. ஆதலால் மிகப்பெரிய அளவில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டி இருக்கிறது.
அதனால் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸை விரைவில் சந்திக்கப் போகிறேன். அவருடன் பேசி கூட்டணி ஆட்சிக்கு முயற்சிப்பேன். இந்த நாடு எங்கள் இருவரையும் எதிர்பார்க்கிறது, ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவோம். இன்றே கான்ட்ஸை சந்திப்பேன், எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் சந்திப்பேன். உடனடியாக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவேன்" எனத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 5-வது முறையாக நெதன்யாகு பிரதமர் ஆனார். ஆனால் கூட்டணி அரசுளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருந்தது.
இதற்கிடையே இஸ்ரேலிய ஊடகங்கள் தரப்பில், " பிரதான எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி நிச்சயம் பிரதமர் நெதன்யாகுவுடன் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துழைக்காது. ஆதலால் 3-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்க வேண்டி இருக்கும். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிதான் நடந்திருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
பிடிஐ