

அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வு வாஷிங்டனில் நடந்துள்ளது.
இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டாக இணைந்து வாஷிங்டனில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமையன்று ராணுவப் பயிற்சியின் முடிவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரன்பீர் கவுர் என்ற பெண் அமெரிக்க ராணுவக் குழுவில் இடம்பெற்றிருந்தது அந்த நிகழ்வை கூடுதல் சுவாரஸ்யமாக்கியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கிய மதத்திலிருந்து ராணுவத்தில் இணைந்த முதல் பெண் ரன்பீர் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தது குறித்து ரன்பீர் கவுர் கூறும்போது, “நான் இந்தியாவில் பிறந்தவள். ஆனால் நான் வளர்ந்தது அமெரிக்காவில்தான். நான் அமெரிக்க ராணுவத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறேன். தற்போது நான் ’யுத் அப்யாஸ் 2019’ பயிற்சியின் இறுதியில் இருக்கிறேன். இந்திய ராணுவ வீரர்களுடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவத்தைத் தந்தது.
இந்தப் பயிற்சியின் சிறப்பு என்னவென்றால் இந்தியாவின் பெண் ராணுவ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்படும் 15-வது கூட்டுப் பயிற்சி இதுவாகும்.