Published : 14 Jul 2015 10:26 am

Updated : 14 Jul 2015 10:26 am

 

Published : 14 Jul 2015 10:26 AM
Last Updated : 14 Jul 2015 10:26 AM

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 3

3

ஐயோ பாவம்! கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ் இந்த வருடம் ஜனவரி 26 அன்றுதான் பிரதமராக பதவியேற்றார். அதற்குள் கிரீஸின் நிலைமை பொருளாதார கோமாவுக்குச் சென்றுவிட்டது. சிவில் பொறியாளரான சிப்ராஸினால் கிரீஸ் என்ற மாபெரும் கட்டிடத்தைச் செப்பனிட முடியவில்லை.

கிரீஸ் அரசியலில் தெளிவாக அவர் நுழைந்தது 2006-ல்தான். சிரிஸாவின் ஆதரவில்தான் அவர் உள்ளூர் முனிசிபாலிடி தேர்தல் ஒன்றில் நின்றார், வென்றார். (சிரிஸா என்பது கிரீஸில் உள்ள ஓர் அரசியல் கட்சி. 2004-ல் உருவாக்கப்பட்ட இது இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு). அவர் போட்டியிட்ட முனிசிபாலிடி ஏதென்ஸ்.


சிப்ராஸ் பிரதமரா, அதிபரா என்ற சந்தேகம் நாளிதழ்களைப் படிக்கும் சிலபேருக்கு வந்திருக்கலாம். அவர் பிரதமர்தான். ஆனால் அந்த நாட்டு வழக்கப்படி அவர் ‘அரசின் அதிபர்’. எனவே அவரை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘மிஸ்டர் பிரசிடென்ட்’ என்றுதான் கூப்பிடுவார்கள். மற்றபடி கிரீஸ் நாட்டுக்கு என்று தனியாக ஓர் அதிபரும் உண்டு.

2007-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றபோது சிப்ராஸ் அதில் போட்டியிட வில்லை. ‘’முனிசிபாலிடி உறுப்பினருக்கான காலகட்டத்தை நான் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே இந்தக் கடமையை முடித்துவிட்டுதான் அடுத்த பதவி’’ என்று அவர் கூறியது பலரையும் கவர்ந்தது.

2015 தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் சிப்ராஸ். இதற்குள் அவர் புகழ் பெற்று, சிரிஸாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். இந்தத் தேர்தலில் 149 இடங்களில் அவரது கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இரண்டு சுயேச்சைகளின் ஆதரவு கிடைத்தது. (நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 உறுப்பினர்கள்). இதைத் தொடர்ந்து அவர் நாட்டின் பிரதமர் ஆனார். இப்படி மயிரிழையில் அவர் அரசை அமைத்ததால் சில விஷயங்களில் மதில் மேல் பூனையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தன்னை பெரும் போராளியாக வெளிப்படுத்திக் கொண்டவர் சிப்ராஸ். பள்ளியில் படிக்கும்போதே மாணவர் தலைவர். அப்போது அவர் பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கூட்டிக் கொண்டு எதற்காகப் போராடினார் தெரியுமா? ‘’நினைத்தபோது விடுப்பு எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் மாணவர் களுக்கு வேண்டும்’’. கிரீஸ் உயர்நிலைப் பள்ளிகளில் அப்போது ஒரு பழக்கம் இருந்தது. மாணவர்கள் என்றாவது பள்ளிக்கு வரவில்லை என்றால் இது குறித்த தகவல்கள் அந்த மாணவனின் பெற்றோருக்குத் தெரிவித்துவிடுவார்கள். இந்தச் செயல் முறையிலிருந்தும் மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று களத்தில் குதித்தவர் சிப்ராஸ்.

ஏதென்ஸில் உள்ள தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பிறகு ‘நகர மற்றும் மண்டல திட்டம் வரைதல்’ படிப்பில் முது கலைக் கல்வியை முடித்தார்.

அதிபர் கார்லோஸ் என்பவரால் பிரதமருக் கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் சிப்ராஸ். மிகவும் பழைய சரித்திரத்தை விட்டுவிட்டால் கிரீஸின் மிக இளமையான பிரதமர் இவர்தான்.

உறுதிமொழி எடுத்துக் கொண்டபோதே சில பிரிவினரிடம் அதிர்ச்சி அலைகளைப் பரப்பினார் இவர். பொதுவாக மத வழியில் தான் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். ‘’கவலை வேண்டாம். கிறிஸ்தவ மத உயர்நிலையுடன் நான் மோத மாட்டேன்’’ என்று கூறியவர் உறுதிமொழியை மட்டும் நவீனமான முறையில் எடுத்துக் கொண்டார்.

‘’நான் ஒரு நாத்திகன். மதச் சடங்குகளைப் பின்பற்றி என் திருமணம் நடக்கவில்லை. என் குழந்தைகளுக்கு ஞான ஸ்நானமும் செய்ததில்லை. எனவே வழக்கமான முறையில் நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ள முடியாது’’ என்று கூறினார்.

சிப்ராஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பெரிஸ்டெரா என்ற பெண்ணைத் தனது பங்குதாரராக பதிவு செய்து கொண்டிருக்கிறார். (இருவரும் எந்த நிறுவனத்தையும் தொடங்கிவிடவில்லை. ‘தனிப்பட்ட வாழ்வின்’ பங்குதாரர்). இருவரும் ஒரே உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். பிறகு இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர் ஆனார்கள்.

அதன்பின் வாழ்க்கைத் துணைவர்களாக இருக்க முடிவு செய்தார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகனுக்கு எர்னெஸ்டோ என்று பெயர் வைத்திருக்கிறார். இது சே குவேராவுக்கு அவர் செலுத்திய அஞ்சலி. (சே குவேராவின் முழுப் பெயர் எர்னெஸ்டோ சே குவேரா).

பிரதமர் ஆனவுடன் தான் கூட்டிய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னுடைய முன்னுரிமைகளை இவர் தெளிவாக விளக்கினார். முதலில் கிரீஸில் உள்ள மனித உரிமைமீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அடுத்து கிரீஸ் பட்டுள்ள பிரம்மாண்டமான கடனைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக முந்தைய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு ஏற்கனவே நடைபெற்ற சில தனியார்மயங்களையும் வாபஸ் பெறவேண்டும்.

ஆனால் இவற்றில் இரண்டாவது பிரச்சினை பூதாகரமாக எழுந்து நின்று மற்ற இரண்டையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

(உலகம் உருளும்)


S: ஜி.எஸ்.எஸ் தொடர்கிரீஸ்வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்கிரீஸ் வரலாறு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்
x