Published : 19 Sep 2019 12:44 PM
Last Updated : 19 Sep 2019 12:44 PM

கருப்பு நிற ஒப்பனை புகைப்படத்தால் சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருப்பு நிற ஒப்பனையுடன் உள்ள பழைய புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2001 ஆம் ஆண்டு, அரேபிய நிகழ்ச்சி ஒன்றில் டர்பன் அணிந்துகொண்டு உடல் முழுவதும் கருப்பு நிற வண்ணத்தில் ஒப்பனை செய்துகொண்ட புகைப்படத்தை சமீபத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டது. இந்தப் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பன்முக கலாச்சாரம் கொண்ட மக்கள் கனடாவில் வசிக்கும்போது, நிறவெறியைத் தூண்டும் வகையில் அந்தப் புகைப்படம் இருப்பதாக பலரும் ஐஸ்டின் ட்ரூடோவை விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து ஜஸ்டின் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் கூறும்போது, ''நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், நிறவெறிக்கு எதிராகவும் பணிசெய்ய இருக்கிறேன். நான் எனது சிறுவயதில் பெரும் தவறு செய்துவிட்டேன். நான் அதைச் செய்திருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு கனடாவின் பிரதமராகப் பதவி ஏற்றார் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த நிலையில் கனடாவில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் ஐஸ்டின் ட்ரூடோ.

கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரும் பொதுத்தேர்தலில் ஐஸ்டினுக்குப் போதிய ஆதரவு இல்லாததால் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x