Published : 19 Sep 2019 12:24 PM
Last Updated : 19 Sep 2019 12:24 PM

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்: ஆட்சியை இழக்கிறாரா நெதன்யாகு? 3-வது முறையாகத் தேர்தலா?

ஜெருசலேம்

இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுவதால், அவர் ஆட்சியை இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி, எதிர்க்கட்சியும் இடதுசாரியான பென்னி காட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொயிட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இஸ்ரேலில் இன்னும் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 93 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி 32 இடங்களுடன் பின்தங்கி இருக்கிறது.

எதிர்க்கட்சியான பென்னி காட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி 33 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் சவாலான போட்டி இருந்து வருகிறது.

மூன்றாவது இடத்தில் அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட் கட்சி 12 இடங்களுடன் இருக்கிறது. பழைமைவாத கட்சியான ஷாஸ்க்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான வலதுசாரிக் கட்சிகள் சேர்ந்து 55 இடங்கள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளன. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படுகிறது.

ஆனால், முன்னாள் ராணுவத் தலைமை அதிகாரி காட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி ஆட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒருவேளை பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் தலைவர் காட்ஸ் அதற்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துவிட்டார்

இதனால், நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் அரபுக் கட்சியான ஜாயின்ட் லிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவே வாய்ப்புள்ளது. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து அரபு முஸ்லிம்களை பிரதமர் நெதன்யாகு விமர்சித்து வருகிறார். இதனால் அந்தக் கட்சியினருடன் சேர்ந்து ஆட்சி அமைக்க நெதன்யாகுவுக்கு வாய்ப்பு அரிதாகி வருகிறது.

புதன்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்கூட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரபு அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார். அதில் " இப்போது நடக்கும் தேர்தலில் இரு வழிகளில் ஆட்சி அமையும். ஒன்று வெற்றி பெற்று நான் மீண்டும் ஆட்சி அமைப்பேன். இல்லாவிட்டால் ஆபத்தான அரபுக் கட்சிகளை தலைமையாகக் கொண்டு ஆட்சி அமையும்" என விமர்சித்துள்ளார்.

ஆனால், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, தொடர்ந்து பிரதமர் நெதன்யாகுவுக்குப் பின்னடைவு ஏற்பட்டு வருவதால், அவர் மீண்டும் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. அப்போது கிடைத்த முடிவுகளோடு நெதன்யாகு கட்சியை இப்போது ஒப்பிட்டால், கட்சியின் வாக்குகள் சிதறிவிட்டன என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் நெதன்யாகுவின் இனவாதப் பேச்சும், அரபு முஸ்லிம்கள், அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளும் அவருக்கு எதிராகத்திரும்பி வாக்குகளை சிதறவிட்டன என்று அந்நாட்டில் உள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மீண்டும் பிரதமரா நெதன்யாகு வருவதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. அல்லது 3-வது முறையாக அதிபர் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x